பள்ளி பஸ் மோதி சிறுவன் பலியான விவகாரம் 1 கோடி இழப்பீடு கேட்டு தந்தை வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பள்ளிப் பேருந்து மோதி, சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக தந்தை ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கோரிய வழக்கில், 4 வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூர் தாலுகா சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த மாயவேல் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: உளுந்தூர்பேட்டை திருவெண்ணெய் நல்லூரில் உள்ள தனியார் பள்ளியான போன் நேரு மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் எனது 7 வயது மகன் முகுந்தன் இரண்டாம் வகுப்பு படித்தான். கடந்த ஜூன் 1ம் தேதி பள்ளி சென்று விட்டு, பள்ளி வாகனத்தில் வீடு திரும்பினான். அதிலிருந்து முகுந்தன் கீழே இறங்கிவிட்டானா என்று பார்க்காமல் வாகன ஓட்டுனர் வாகனத்தை எடுத்துள்ளார். இதனால், கீழே விழுந்த முகுந்தன் மீது  பின்பக்க சக்கரம் சிறுவனின் தலையில் ஏறியது. இதில் அவன் உயிரிழந்தான்.வாகனத்திற்கு ஓட்டுநரை நியமனம் செய்த பள்ளி நிர்வாகம் குழந்தைகளை வாகனத்தில் ஏற்றுவதற்கு உதவியாளரை நியமிக்கவில்லை. இது விதிமுறைகளுக்கு முரணானது.

 இதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி  தமிழக அரசு, விழுப்புரம் மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு மனு கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எனது மகன் பலியான சம்பவம்  குறித்து சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறும், முகுந்தன் உயிரிழப்புக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்குமாறு பள்ளி நிர்வாகம் மற்றும்   அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக  4 வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்குமாறு  உத்தரவிட்டார்.

Tags : High Court ,Tamil Nadu ,government ,Tamil Nadu High Court , Tamil Nadu, High Court,Tamil Nadu,father
× RELATED மெரினாவில் புதிதாக அமையும்...