×

உபகரணங்கள் இன்றி கழிவுநீர் அகற்றுவதால் தொடரும் அவலம் அரசின் அலட்சியத்தால் விஷவாயு தாக்கி பறிபோகும் மனித உயிர்கள்: தமிழகம் முதலிடம் வகிப்பது வேதனை

சென்னை: சட்டம் இருந்தும் விழிப்புணர்வு இல்லாத காரணத்தாலும், போதிய உபகரணங்கள் இல்லாததாலும் கழிவுகளை அகற்றும்போது விஷவாயு தாக்கி சங்கிலி தொடராக மனித உயிர்கள் பறிபோவது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.  இதில், தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளதுதான் வேதனையிலும் வேதனை அளிக்கிறது. சென்னை மகாபலிபுரத்தில் ஏற்பட்ட படகு விபத்துக்கு பிறகு தான் லைப் ஜாக்கெட் அணிந்து படகு பயணங்கள் மேற்கொள்ளப்படுகிறது. ஆழ்துளை கிணறில் விழுந்து இறக்கும் குழந்தைகளின் மரணத்துக்கு பின்பு தான் பயன்பாடற்று கிடக்கும்  ஆழ்துளை கிணறுகள் எல்லாம் மூடப்பட்டு வருகிறது.  அந்த வரிசையில், இப்போது கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் மனித உயிர்கள் பல விஷவாயு தாக்குதலுக்கு ஆளாகி இறப்பது அதிகரித்து வருகிறது. ஆனால், இந்த உயிரிழப்புகளுக்கு மட்டும் முடிவில்லாமல் தொடர்கதையாகவே நீண்டு  கொண்டிருக்கிறது. இதற்கு காரணம், விஷவாயு இறப்புகள் பல வெளியில் தெரியாமல் மூடி மறைக்கப்படுவதுதான். அதனால்தான் இந்த விவகாரம் மட்டும் சத்தமில்லாமல் சமாதியாகிவிடுகிறது.  

 ராயப்பேட்டையில் நேற்று முன்தினம் தனியார் வணிக வளாகத்தில் கழிவுநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த கூலி தொழிலாளி ஒருவர் விஷவாயு தாக்குதலுக்கு ஆளான தனது தம்பியின் உயிரை காப்பாற்ற தனது உயிரை இழந்த  சம்பவம் கண்ணீரை வரவழைப்பதாக உள்ளது.  இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தமிழக அரசு காட்டி வரும் அலட்சியதால் ஒவ்வொரு சம்பவங்களின் போதும் விலைமதிப்பில்லா பல உயிர்களை இழந்து  வருகிறோம்.  விஷவாயு தாக்கி இறப்பவர்களின் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழகம் தான்  முதலிடத்தில் இருக்கிறது. ஒட்டுமொத்த இறப்பு சதவிகிதத்தில் கிட்டத்தட்ட 44  சதவிகித உயிரிழப்புகள் தமிழ்நாட்டில்தான் நிகழ்கிறது என்பது  வேதனையிலும் வேதனையான ஒன்று.  2016ம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, தமிழகத்தில் மட்டும் 458 பேர் விஷவாயு  தாக்கி உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 252 பேர் மரமணடைந்துள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற மரணங்கள் அதிகமானதும், `பாதாளச் சாக்கடை மற்றும் செப்டிக் டேங்க்குகளில் மனிதர்களை இறக்கி சுத்தம் செய்ய வைக்கக் கூடாது’ என்று 2013ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது.   ஆனால், அந்த சட்டத்தை யாரும் மதிக்காமல் போவதால்தான் இதுபோன்ற உயிரிழப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், துப்புரவுப் பணி முழுவதுமாக தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டதுதான் இதற்கு முக்கிய  காரணம். இப்போது, அரசு நேரடியாக இதுபோன்ற வேலைகளுக்கு ஆள் எடுப்பதில்லை. கான்ட்ராக்டர்கள் மூலமாகவே ஆள் சேர்ப்பு நடக்கிறது.  

 பணி செய்யும் போது யாராவது உயிரிழந்தால், அதற்கு அந்த கான்ட்ராக்டரைக் கைகாட்டிவிட்டு, அரசாங்கம் தப்பித்துக்கொள்கிறது. `கழிவுநீர்த் தொட்டிக்குள் இறங்கி ஒருவர் உயிரிழந்தால் மட்டுமல்ல... தொட்டிக்குள் இறங்கினாலே, அந்த  இடத்தின் உரிமையாளரை கைது செய்ய வேண்டும்’ என்று சட்டம் சொல்கிறது. அதற்குரிய உபகரணங்களை பயன்படுத்த வேண்டும் என்று அரசு அதிகாரிகளும் கண்டிப்பதில்லை. தனியார் கட்டிட உரிமையாளர்களும் கண்டு கொள்வதில்லை. உயிரிழப்புகள் ஏற்படும் போது குறிப்பிட்ட தொகையை அந்த கூலி  தொழிலாளிகளின் குடும்பத்துக்கு கொடுத்து விவகாரத்தை வெளியில் தெரியாமல் மறைத்துவிடுகின்றனர். இதன் விளைவு, எத்தனை பேர் ஆண்டுதோறும் உயிரிழக்கின்றனர் என்ற உண்மையான புள்ளி விவரங்கள் கூட அரசுக்கு தெரிவதில்லை.  விஷவாயுவால் ஏற்படும் உயிர்ப்பலிக்கு ஒரு அதிரடியான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்து செயல்படுத்தாதவரை இதுபோன்ற உயிரிழப்புகளை தமிழகத்தில் என்றுமே தடுக்க முடியாது என்பது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

விஷவாயுவாக மாற காரணம் என்ன?     
செப்டிக் டேங்க் அல்லது கழிவுநீர் தொட்டி என எதுவாக இருந்தாலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். பல நாட்கள் கழித்து சுத்தம் செய்யும்போது டேங்க்கின் அடிப்பகுதியில் மலம் இறுகிப்போய், ஒரு  பாறைபோல் ஆகிவிடும். அதை இயந்திரங்களின் மூலம் சுத்தம் செய்ய முடியாது. அதனால், மனிதர்களை இறக்கி, கடப்பாரை, மண்வெட்டியால் சுத்தம் செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். பல நாட்களாக கழிவுகள் அடியில் தேங்கி  இருப்பதால்தான், அது விஷவாயுவாக மாறி உயிரைப் பறிக்கிறது.

மதுவுக்காக உயிரிழக்கும் பரிதாபம்  
கழிவுநீர் அடைப்பு ஏற்படும்போது, அவற்றை சரிசெய்ய நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர் என தலா 4 பேர் செல்கின்றனர். பாதாள சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஒப்பந்த தொழிலாளர்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர்.  பாதாள சாக்கடைக்குள் மது அருந்தாமல் இறங்க முடியாது என்பது, இந்த ஊழியர்களின் கருத்து. எனவே, ஒப்பந்ததாரர்கள் இதுபோன்ற பணிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.500 முதல் ரூ.800 வரை வழங்குவதுடன் தேவையான மதுவும் வாங்கி  கொடுக்கின்றனர். இதனால் எந்த கவலையும் இல்லாமல் குழிக்குள் இறங்கும் தொழிலாளர்கள் இறப்பை சந்திக்கும் பரிதாப நிலை உள்ளது. 


Tags : Tamil Nadu , Disposal , equipment ,government ,negligence, Tamil Nadu
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...