×

2021ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ரஜினி வந்தால் சேர்த்துக் கொள்வோம்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: தமிழகத்தில் 2021ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ரஜினிகாந்த் வந்தால் சேர்த்துக்கொள்வோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:சென்னையில், ஐஐடி மாணவி மரணம் குறித்து அவருடைய தந்தை அளித்த புகாரின்பேரில், போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டார். அதன் அடிப்படையில் இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு  மாற்றப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் வெற்றிடம் என்பது இல்லை. மக்கள் அந்த வெற்றிடத்தை நிரப்பிவிட்டார்கள். அதிமுக உள்ளாட்சி தேர்தலிலும், அதற்கு அடுத்ததாக வரும் சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிபெறும்.2021ல் சட்டமன்ற தேர்தலின்போது எந்த கட்சிகள் எங்கள் கூட்டணியில் இருக்கும் என்று அப்போது தான் சொல்ல முடியும். எதிர்காலம் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். அரசியலில் நிரந்தர நண்பரோ, எதிரியோ இல்லை. ரஜினி வந்தால்  எங்கள் சூழ்நிலையை பொறுத்து ஏற்றுக்கொள்வோம். அது கட்சி எடுக்கும் முடிவு. உள்ளாட்சி தேர்தலை நடத்த விடாமல் தடுப்பது திமுக தான். அவர்கள் செய்துவிட்டு, எங்கள் மீது பழிபோடுகிறார்கள். தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல்  குறித்து விரைவில் அறிவிப்பை வெளியிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.

உள்ளாட்சி தேர்தல் நடக்குமா?
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ள உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழக அரசு ஏதாவது ஒரு காரணம் காட்டி  தள்ளி வைத்து வருகிறது. தற்போது, உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கான பணிகள் வேகமாக நடைபெறுவது போன்று ஒரு தோற்றத்தை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் நேற்று பேட்டி அளித்த  அமைச்சர் ஜெயக்குமார், உள்ளாட்சி தேர்தலை நடத்தவிடக்கூடாது என்று திமுக சூழ்ச்சி செய்து வருகிறது என்று கூறினார். இதே கருத்தை அமைச்சர் செல்லூர் ராஜுவும் கூறியுள்ளார். இப்படி அமைச்சர்கள் ஒவ்வொருவரும் எதிர்க்கட்சிகள் மீது  குற்றம் சாட்டுவதை பார்க்கும்போது, ஆளுங்கட்சியினருக்கு உண்மையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த ஆர்வம் உள்ளதா, இல்லையா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Tags : Rajini ,AIADMK ,alliance ,Minister Jayakumar ,elections , 2021 ,elections,Rajini ,AIADMK , Minister Jayakumar
× RELATED நான் செல்லும் இடங்களில் எல்லாம்...