சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரம் குறித்த வழக்கு 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

* பெண்கள் செல்ல தடையில்லை * உச்சநீதிமன்ற 5 பேர் பெஞ்ச் உத்தரவு

புதுடெல்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் வழிபாட்டுக்கு அனுமதிக்கும் விவகாரத்தில் எந்தவித தடையும் விதிக்காத உச்ச நீதிமன்றம், அதுதொடர்பான வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வின் விரிவான விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. இதில், 10 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது. இது காலம், காலமாக கடைபிடிக்கப்படும் நடைமுறை. குறிப்பிட்ட வயது பெண்கள் சுவாமி தரிசனம் செய்ய கடந்த 1991ல் கேரள உயர் நீதிமன்றமும் தடை விதித்தது. இந்நிலையில் மேற்கண்ட உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வயது வித்தியாசம் இன்றி அனைத்து பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று கடந்தாண்டு செப்டம்பர் 28ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் மட்டுமல்லாமல், இந்து மதத்தைச் சேர்ந்த ஆன்மிகவாதிகள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி கேரளாவை சேர்ந்தநாயர் அமைப்பு உள்பட பல்வேறு அமைப்புகள், தனிநபர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்த வழக்கில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பு அளித்தது.

இந்த அமர்வில், நீதிபதிகள் ரோகிண்டன் பாலி நாரிமன், ஏ.எம்.கன்வீல்கர், டி.ஒய்.சந்திரசூட் மற்றும் இந்து மல்கோத்ரா ஆகியோரும் இடம்பெற்றனர். நீதிபதிகள் தீர்ப்பில் கூறியதாவது:மதம் சார்ந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை, அதற்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். மதம் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமையாகும். இது தர்கா, மசூதி, சர்ச் என அனைத்திற்கும் பொருந்தும். அனைத்து மதத்தை சார்ந்தவர்களும் அவர்களின் மத நம்பிக்கையை கடைப்பிடிக்க உரிமையுள்ளது. சபரிமலையில் மட்டுமின்றி, வேறு மதங்களை சார்ந்த வழிபாட்டு தலங்களிலும் பெண்களுக்கு தடை உள்ளது. சபரிமலை விவகாரத்தில் வழங்கப்பட்ட உத்தரவை கேரள அரசு உட்பட அனைவரும் விளம்பரத்திற்காக பயன்படுத்தி விட்டனர் என்றுதான் நீதிமன்றம் கருதுகிறது. மதம் சார்ந்த விஷயங்களை விரிவாக ஆய்வு செய்ய வேண்டி உள்ளதால், இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்விற்கு மாற்றி பரிந்துரை செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.  இத்தீர்ப்பில், சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபாட்டுக்கு செல்லலாம் என்ற முந்தைய உத்தரவிற்கு எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை. மேலும், 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு இந்த மறுசீராய்வு வழக்கு மாற்றப்பட்டு உள்ளதால், அதில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தற்போதைய நிலை தொடரும். பெண்கள் சபரிமலைக்கு சென்று தரிசிக்கலாம்.நேற்றைய தீர்ப்பில், தலைமை நீதிபதி உட்பட மூன்று நீதிபதிகள் மட்டும் இந்த வழக்கை 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்துள்ளனர். நீதிபதிகள் ரோகிண்டன் பாலி நாரிமன், சந்திரசூட் ஆகியோர், அதுபோன்ற பரிந்துரையை செய்யவில்லை. இருப்பினும், பெரும்பான்மையான நீதிபதிகள் இந்த முடிவை விரும்பியதால், 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கு மாற்றப்படுகிறது. இதனால், சபரிமலை வழக்கில் இறுதி தீர்ப்பு வெளியாக மேலும்

தாமதமாகும்.

பாப்டே தலைமை

வரும் 17ம் தேதியுடன் தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, நீதிபதி எஸ்.ஏ.பாப்டே புதிய தலைமை நீதிபதியாக பதவி ஏற்க உள்ளார். இதனால், சபரிமலை வழக்கை விசாரிக்கும் 7 நீதிபதிகள்

அரசியல் சாசன அமர்வு, இவர் தலைமையில் அமையும் என தெரிகிறது.

விரிவான விசாரணை ஏன்?

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனது தீர்ப்பில், ‘சபரிமலை விவகாரம் மதம், நம்பிக்கையை சார்ந்தது. அதனால், இதை முழுமையாக ஆராயாமல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டால், அது மிகப்பெரும் குந்தகத்தை ஏற்படுத்தக் கூடும். அதனால், இந்த விவகாரத்தை விரிவாக விசாரிக்க, 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட வேண்டும்,’ என கூறியுள்ளார்.

Related Stories:

>