நகரின் மையப்பகுதியிலேயே கடையநல்லூர் புதிய தாலுகா கட்டுமான பணி துவக்கம்: பொதுமக்கள் மகிழ்ச்சி

கடையநல்லூர்: கடையநல்லூர் நகரின் மையப்பகுதியிலேயே தாலுகா அலுவலக கட்டுமான பணிகள் நேற்று முதல் துவங்கியது. இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடையநல்லூரில் தாலுகா அலுவலகம் தற்போது மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலக வளாகத்தில் பொதுமக்களுக்கு எளிதாக இயங்கி வருகிறது. இந்நிலையில் தாலுகா அலுவலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு கடையநல்லூரிலிருந்து காசிதர்மம் செல்லும் சாலையில் வனப்பகுதியில் அரசு நிலத்தில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் தேதி இரவில் அடிக்கல் நாட்டப்பட்டது.

வனப்பகுதியில் தாலுகா அலுவலகம் கட்டுவதை கண்டித்து அன்று இரவே முஸ்லிம் லீக் கட்சியினர் கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு தெரிவித்தும், எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து டிசம்பர் 20ம் தேதி முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுசெயலாளர் முகம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ.தலைமையில் அனைத்துக்கட்சியினரின் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

டிசம்பர் 22ம்தேதி எஸ்.டி.பி.ஐ.கட்சி சார்பில் சர்வ கட்சியினரின் கண்டன ஆர்ப்பாட்டம், வணிகர்கள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. டிசம்பர் 24ம் தேதி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 600க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறைநிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜனவரி மாதம் 5ம் தேதி முகம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. தலைமையில் அனைத்துக்கட்சியினரின் உண்ணாவிரத போராட்டம், ஜனவரி 19ம்தேதி கையெழுத்து இயக்க போராட்டமும் நடந்தது. தொடர்ந்து மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்தும், சட்டமன்ற கூட்டத்தொடரில் கவன ஈர்ப்பு தீர்மானமும் கொண்டு வந்து கருப்புச்சட்டை அணிந்து முகம்மது அபூபக்கர் எம்எல்ஏ வெளிநடப்பு செய்தார். இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 12ம்தேதி மாலையில் கலெக்டர் ஷில்பா பிரகாஷ் சதீஷ் தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் யூனியன் அலுவலகம் அருகில் வேளாண்மை அலுவலகம் பயன்பாடின்றி இயங்கி வந்த பழைய கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில் ஆய்வு மேற்கொண்ட பிறகு அந்த கட்டிடங்களை இடிக்கும் பணிகள் நடந்தது. பின்னர் தனி நபர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் பணிகள் துவங்காமல் கிடப்பில் கிடந்தது. மதுரை நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் முகம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ.வின் முயற்சியால் கடந்த ஜூலை மாதம் 16ம் தேதி சட்டமன்றத்தில் வருவாய்துறை அமைச்சர் நகரின் மையப்பகுதியிலேயே தாலுகா அலுவலகம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். இதனால் இந்த கட்டிடத்தில் தாலுகா அலுவலக கட்டுமான பணிகள் துவங்குமா? என்று பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு போர்வெல் போடும் பணி நடந்தது. நேற்று முதல் வானம் தோண்டும் பணி நடந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்களும், அரசியல் கட்சி பிரமுகர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories:

>