×

‘தேனீயாய் தேனி பெண்’...தள்ளுவண்டியில் தினமும் 25 கி.மீ. சென்று இளநீர் விற்பனை: 23 ஆண்டுகளாக தொழில் செய்து வருகிறார்

தேனி: தேனியில் 23 ஆண்டாக தள்ளுவண்டியில் இளநீர் வைத்து தினமும் சராசரியாக 25 கி.மீ. தள்ளி நகரின் பல பகுதிகளில் சுற்றி முருகேஸ்வரி என்ற பெண் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். சிலரது உழைப்பை கவனிக்கும் போது, நாம் என்ன பெரிதாக சாதித்து விட்டோம் என்ற எண்ணம் வரும். அது போன்ற ஒரு சாதனை உழைப்பாளர்தான் தேனியை சேர்ந்த முருகேஸ்வரி (45). ஆண்களே ஒரு மரத்தடியில் அமர்ந்து விற்பனை செய்யும் இளநீரை, இவர் கை வண்டியில் வைத்து தேனியின் நகர் பகுதியில் தினமும் சராசரியாக 25 கி.மீ. துாரம் தள்ளி சென்று விற்பனை செய்து, வருவாய் ஈட்டி தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இதுகுறித்து முருகேஸ்வரி கூறியதாவது: தேனி மற்றும் சுற்றுக்கிராமங்களிலுள்ள தோட்டங்களுக்கு சென்று இளநீர் விலைக்கு வாங்கி கைவண்டியில் வைத்து தள்ளிச் செல்வேன். ஒரே இடத்தில் விற்றால் அந்த பகுதிக்கு வருபவர்கள் மட்டுமே வாங்குவார்கள். நான் தேனியில் பல்வேறு குடியிருப்பு பகுதிகளுக்கும் தள்ளி செல்வேன். என் தள்ளுவண்டி வந்ததை பார்த்ததும், குடும்ப பெண்கள் பலரும் வந்து என்னிடம் இளநீர் வாங்கி குடிப்பார்கள்.

ஒவ்வொரு தெருவிலும் வசிப்பவர்களுக்கு, அந்த தெருவிற்கு நான் எப்போது வருவேன் என்பது தெரியும். அதனால் சில வாடிக்கையாளர்கள் என் வருகைக்காகவே காத்திருப்பார்கள். ரோட்டில் தள்ளி செல்லும் போது ஆண்கள் பெரும்பாலும் வாங்கி குடிப்பார்கள். இருப்பினும் குடும்ப பெண்கள் தான் என் விற்பனை இலக்கில் உள்ளவர்கள். அவர்களது வாசலுக்கே தள்ளுவண்டியுடன் சென்ற நான் நின்றதும் வாங்கி குடிப்பார்கள். ஒரு இளநீர் 20 ரூபாய், 25 ரூபாய், 30 ரூபாய் என ரகத்திற்கு ஏற்ப விற்பனையாகிறது. நான் 23 ஆண்டுகளாக இந்த தொழில் செய்து வருகிறேன். இளநீர் விற்பனை தொடங்கும் போது இளநீரை வெட்டிக்கொடுப்பது சிரமமாக இருந்தது. தற்போது ஆண்களை விட மிக சிறப்பாக ஒரு சொட்டு தண்ணீர் கூட சிந்தாமல் இளநீர் வெட்டி கொடுப்பேன். எனவே என்னிடம் பெரும்பாலும் யாரும் பேரம் பேசுவதில்லை. இளநீர் கொள்முதல் விலையும் அதிகரித்துள்ளதால், எனக்கு என் குடும்பத்தை வழிநடத்தும் அளவிற்கு வருவாய் கிடைத்து வருகிறது. இவ்வாறு கூறினார்.

Tags : Theni , Theni girl, trolley, juicer sale
× RELATED தேனியில் தபால் ஓட்டுக்கான...