×

செங்கோட்டை ரயிலில் கழிவறைக்கு கதவுகள் இல்லை: பயணிகள் சிரமம்

திருமங்கலம்: மதுரை-செங்கோட்டை பயணிகள் ரயிலில் கழிவறைக்கு கதவுகள் இல்லாததால் பெண் பயணிகள் சிரமம் அடைகின்றனர். மதுரையிலிருந்து செங்கோட்டைக்கு திருமங்கலம், சிவகாசி, ராஜபாளையம் வழியாக தினசரி இரு மார்க்கத்திலும் காலை, பகல், மாலை என மூன்று வேளைகளில் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. இதில் குறிப்பாக காலை மற்றும் இரவு வேளையில் இயக்கப்படும் ரயில்களில் கட்டுகடங்காக பயணிகள் கூட்டம் உள்ளது.
 20 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ள இந்த பயணிகள் ரயில் அதிக வருவாய் உள்ள ரயில்களில் ஒன்றாக மதுரை கோட்டத்தில் இயக்கப்படுகிறது. மதுரை, விருதுநகர், நெல்லை உள்ளிட்ட மூன்று மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமாக இயக்கப்படும் செங்கோட்டை பயணிகள் ரயில்களில் தற்போது பழைய பெட்டிகள் பல இணைக்கப்பட்டுள்ளன.

மதுரையிலிருந்து ராஜபாளையம், சங்கரன்கோவில், சிவகாசிக்கு பலரும் வேலைக்கு சென்று வருகின்றனர். சமீபகாலமாக இந்த ரயிலில் கழிவறைக்கு கதவுகள் இல்லாமலும் பெட்டியின் உள்புறத்தில் மின்விளக்குகள் சரிவர எரியாமலும் இயக்கப்பட்டு வருகிறது. கழிவறைக்கு கதவுகள் இல்லாதது பெண் பயணிகளுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை-செங்கோட்டை ரயில் மார்க்கத்திலுள்ள ஸ்டேஷன்கள் இருள் சூழ்ந்து காணப்பட்ட நிலையில் தற்போது ரயிலும் இருள் சூழ்ந்து இயக்கப்படுவது வேதனை அளிப்பதாக பயணிகள் தெரிவித்தனர். அதிக வருவாய் தரும் மதுரை-செங்கோட்டை பயணிகள் ரயிலில் மின்விளக்குகளின் பழுதை நீக்கியும், கழிவறை கதவுகளை சரிசெய்தும் இயக்க தென்னக ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தென்மாவட்ட பயணிகளின் கோரிக்கையாகும்.

Tags : railway ,passengers ,Sengottai ,Sengottai Railway , Red Fort, Toilet, Doors, Travelers
× RELATED வடமதுரை ரயில் நிலையம் வந்த செங்கோட்டை-...