×

அடாவடியாக செயல்படும் நிர்வாகம்: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் உண்டியல் பண கணக்கில் முறைகேடு

பெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர் ஒன்றியம் வல்லக்கோட்டையில் சுப்பிரமணிய சாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் கிருத்திகை திருவிழா, ஆடி கிருத்திகை, தைப்பூசம் மற்றும் கந்த சஷ்டி விழா சிறப்பாக நடத்தப்படுகிறது. கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்வார்கள். பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துவார்கள். இந்த நிலையில், உண்டியல் காணிக்கையில் பெரும் முறைகேடு நடப்பதாகவும் இதற்கு கோயில் நிர்வாகத்தினர் உடந்தையாக இருப்பதாகவும் பக்தர்கள் சரமாரி குற்றச்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது: கோயிலில் அனைத்து அபிஷேகத்துக்கும் பணம் வசூலிக்கப்படுகிறது. இதன்மூலம் கோயிலுக்கு லட்சக்கணக்கில் வருமானம் வருகிறது. பக்தர்கள் காணிக்கை செலுத்த கோயில் வளாகத்தில் 5 உண்டியல்கள் உள்ளது. கோயிலின் வரவு செலவு கணக்குகளை முறையாக பராமரிப்பதில்லை. அதிகாரிகள் துணையுடன் பணம், பொருள் கையாடல் நடந்து வருகிறது. எனவே, பொதுமக்கள் முன்னிலையில் கோயில் உண்டியல் திறந்து காணிக்கையை எண்ணவேண்டும். ஆனால் நிர்வாகிகள் தன்னிச்சையாக உண்டியலை திறந்து பணம் எடுத்து செலவு செய்கின்றனர். ஒவ்வொரு ஆண்டு வரவு-செலவு கணக்கை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கவேண்டும். ஆனால் இதுவரை ஒரு ஆண்டுகூட கணக்கு காட்டவில்லை.  தமிழக அரசின் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தினமும் வெவ்வேறு பகுதிகளில் இருந்து யாராவது ஒருவர் அன்னதானம் செய்ய கட்டணம் செலுத்தி வருகின்றனர். இதன்மூலம் கிடைக்கும் வருவாய் கணக்கை முறையாக பராமரிக்கவில்லை.

பக்தர்கள் வழங்கும் அன்னதானத்தை கோயில் நிர்வாகம் மூலம் வழங்கப்பட்டதாக பதிவேட்டில் கணக்கு காட்டி பணம் சுருட்டி வருகின்றனர். இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோயிலில் கல்யாணம் நடத்த ரூ.150 வசூலிக்க வேண்டும். ஆனால் ரூ.6800 வசூலிக்கின்றனர். 5 பேர் துப்புரவு பணியாளர்கள் இருக்கவேண்டும். தற்போது 2 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். ஆனால் 5 பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதாக கணக்கு காட்டுகின்றனர். எனவே, வல்லக்கோட்டை முருகன் கோயிலில் நடக்கும் கையாடலை தடுக்க இந்து அறநிலையத்துறை அதிகாரி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பக்தர்கள் தெரிவித்தனர்.

Tags : Valukottai Murugan Temple Vulnerable Administration ,Valukottai Murugan Temple in Money Laundering , Administration, Vallakottai, Murugan Temple, Undial, Abuse
× RELATED டான்செட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்