×

பல வருட கோரிக்கைக்கு விடிவுகாலம்: கழிப்பட்டூர் கிராம குளம் சீரமைப்பு

திருப்போரூர்: கழிப்பட்டூர் சித்தேரி குளம் சீரமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. மக்களின் பல ஆண்டுக்கு கோரிக்கைக்கு தற்போது விடிவுகாலம் பிறந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம், முட்டுக்காடு ஊராட்சியில் உள்ள கழிப்பட்டூர் கிராமத்தில் பழைய மாமல்லபுரம் சாலையையொட்டி சித்தேரி குளம் உள்ளது. தற்போது குளத்தை சுற்றிலும் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. குளத்தின்  மற்றொரு பக்கத்தில் கூட்டுறவு கடையும் அரசு நடுநிலைப்பள்ளியும் உள்ளது. இந்த பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் குளத்தை கடந்துதான் செல்லவேண்டும். தற்போது குளத்தில் மழைநீர் தேங்கிநிற்பதால் மாணவ, மாணவிகள் செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள வீடு, கடைகள் மற்றும் ஓட்டல்களில் சேரும் கழிவுகளை குளக்கரையில் கொட்டி வருவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குளத்தின் தண்ணீர் மாசுப்பட்டு நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டது. இதனால் குளத்தை முறையாக பராமரித்து பாதுகாப்பு வேலிகள் அமைக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் பல வருடங்களாக திருப்போரூர் ஒன்றிய நிர்வாகம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில், கழிப்பட்டூர் சித்தேரி குளக்கரையை பலப்படுத்தி சீரமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

Tags : Request, Receipt, Pool, Renovation
× RELATED சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள...