×

இறுதி பட்டியல் தயார் உள்ளாட்சி தேர்தலுக்கு முன் 2 ஆயிரம் சிறப்பு நிதி : தமிழக அரசு முடிவு

சென்னை: வறுமைகோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கும் திட்டத்தை உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகள் 60 லட்சம் பேருக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.2,000 சிறப்பு நிதி உதவி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து, ஊரக மற்றும் நகர்ப்புற வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கான சிறப்பு நிதி உதவி வழங்கப்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வகுத்தது. .இந்தப் பணிகளை கண்காணிக்க மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்ட 7 பேர் குழுவும், சென்னை மாநகராட்சியில், சென்னை மாநகராட்சி ஆணையரை தலைவராக கொண்ட 7 பேர் குழுவும் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், சிறப்பு நிதி பெற தகுதியான பயனாளிகளிடமிருந்து வங்கி கணக்கு, வங்கி ஐஎப்எஸ்சி குறியீடு எண், பொது விநியோக குடும்ப அட்டை எண், ஆதார் எண், குடும்ப தலைவரின் தொழில் போன்ற விவரங்கள் சேகரிக்கும் பணியில் உள்ளாட்சி துறை பணியாளர்கள் ஈடுபட்டனர். இந்த பணியின் போது பலரை கண்டுபிடிக்க முடியாமல் ஊழியர்கள் திணறினர். 15 ஆண்டுக்கு முந்தைய ஆய்வை பயன்படுத்தியதால் 50 சதவீத பயனாளிகளை மட்டுமே கண்டுபிடிக்க முடிந்தது. இதுவரை சேகரிக்கப்பட்ட பயனாளிகளின் தகவல்களை மீண்டும் சரிபார்க்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் முடிவில் 40 சதவீத பயனாளிகளை மட்டுமே கண்டறிய முடிந்தது.

தொடர்ந்து, புதிய பயனாளிகளை கண்டறிய தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ளாட்சி துறை பணியாளர்கள் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணிகள் கடந்த மாதம் முடிவடைந்தது. இதன் முடிவில் பட்டியல் இறுதி செய்யப்பட்டு முதல்வரின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் அனுமதி அளித்தவுடன் தமிழ்நாடு மகளிர் ேமம்பாட்டு நிறுவனத்தின் மூலம் பயனாளிகளின் வங்கி கணக்கில் நிதி செலுத்தப்படும். இதன்படி பார்த்தால் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாக ரூ.2 ஆயிரம் நிதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : elections ,government ,Govt ,election , 2 thousand special funds ,local election ,inal list
× RELATED மக்களவை தேர்தல் நேரத்தில் ரூ.1.65 லட்சம்...