நகர்ப்புற ஏழைகளுக்கு குறைந்த விலையில் வீடு சிகாகோ வீட்டுவசதி குழுமத்துடன் இணைந்து செயல்படுத்த திட்டம் : துணை முதல்வர் ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற ஏழைகளுக்கு குறைந்த விலையில் வீடு வழங்கும் திட்டத்தை  சிகாகோ வீட்டுவசதி குழுமத்துடன் இணைந்து செயல்படுத்த ஆர்வமாக  இருப்பதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அமெரிக்கா சென்றுள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சிகாகோ வீட்டு வசதி குழும அலுவலகம் சென்று அங்கு செயல்படுத்தப்படும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களின் சிறப்பம்சங்கள் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி துறை திட்டங்களுக்கு தேவையான முதலீடுகளை ஈர்ப்பது குறித்து விரிவான ஆலோசனை செய்தார். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: தமிழகத்தில் உள்ள ஏழரை கோடி மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் நகரங்களில் வாழ்வதாலும், நகர்ப்புறமயமாதல் அதிவேகமாக நடைபெறுவதாலும், நகர்ப்புறங்களில் வாழும் ஏழைகளுக்கு குறைந்த விலையில் வீடு கட்டிக் கொடுக்க வேண்டியது மிக அவசரமான முன்னுரிமை திட்டம் என்று கருதுகிறேன்.

துணை முதல்வர் என்ற முறையில் நான் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை பொறுப்பையும் வகிக்கிறேன். ஆகவே குறைந்த விலையில் வீடு கட்டிக் கொடுப்பதை ஒரு நீடித்த நிலைத்த திட்டமாக செயல்படுத்துவதில் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். நகர்ப்புற ஏழைகளுக்கு குறைந்த விலையில் வீடு வழங்கும் திட்டத்தை சிகாகோ வீட்டு வசதி ஆணையம் கடந்த 80 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது என்பதை அறிந்திருக்கிறேன். இந்த திட்டத்தை பெரு மற்றும் வளரும் நகரங்களில் செயல்படுத்தும்போது சிகாகோ வீட்டுவசதி ஆணையத்திற்கு கிடைத்துள்ள அனுபவங்களை அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறோம்.

இந்த திட்டத்தை நிறைவேற்றுவோர் மற்றும் பயனாளிகளுக்கு இடையில் உள்ள அனுபவங்கள், நவீன கட்டுமான தொழில்நுட்பங்கள் எப்படி பயன்படுத்தப்பட்டன. குறைந்த விலைக்கு வீடு பெறும் குடும்பங்களின் சமூக-பொருளாதார வளர்ச்சியை உயர்த்துவதற்கு என்ன மாதிரியான புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதையெல்லாம் அறிய விரும்புகிறோம். தமிழ்நாட்டில் உள்ள வீடு கட்டும் முகமைகள், சிகாகோ வீட்டுவசதி குழுமத்துடன் எந்த அடிப்படையில் இணைந்து செயல்படுவது என்பது பற்றிய கருத்துக்களையும் அறிய ஆவலுடன் இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், சிகாகோ வீட்டுவசதி குழும திட்டம் மற்றும் செயலாக்கம் பிரிவின் இயக்குனர் ஜெனிபர் ஹோய்லி, தலைமை கட்டுமான அதிகாரி மாத் மோஸர், சிகாகோவின் இந்திய தூதரக அதிகாரி சுதாகர் தலேலா, தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

700 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்
 
சிகாகோவில் நடைபெற்ற இந்திய-அமெரிக்க தொழில் கூட்டமைப்பின் சர்வதேச வட்ட மேஜை கருத்தரங்கத்தில் பங்கேற்று தமிழகத்தில் தொழில் முதலீடுகள் செய்ய உள்ள வாய்ப்புகள் குறித்து துணை முதல்வர் ஓபிஎஸ் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியின்போது சிகாகோ குளோபல் ஸ்டாடஜிக் அலையன்ஸ் உதவியுடன், தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மற்றும் தமிழ்நாடு உறைவிட நிதிக்கு, 100 மில்லியன் அமெரிக்க டாலர் (700 கோடி) மதிப்புள்ள முதலீடுகள் திரட்டுவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.  இந்த நிகழ்வின்போது, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார், இந்திய-அமெரிக்க தொழில் கூட்டமைப்பின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags : poor ,Deputy Chief Minister OPS Announcement ,Chicago Housing Group , Plan to implement ,low-cost housing ,urban poor ,Chicago Housing Group
× RELATED ஏப்ரல் மாதம் தொடங்கப்படும் வீடுகள்...