ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 39 கோடி செலவில் பாண்டிபஜாரில் நடைபாதை வளாகம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

சென்னை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாண்டி பஜாரில் பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் 39.36 கோடி செலவில் நடைபாதை வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. நடைபாதை வளாகம் மற்றும் ஸ்மார்ட் சாலைகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று தி.நகர் பனகல் பூங்கா அருகே நடந்தது. நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங் வரவேற்றார். தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.நகர் நடைபாதை வளாகம் மற்றும் 14 ஸ்மார்ட் சாலைகளை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், அன்பழகன், தங்கமணி, தலைமை செயலாளர் சண்முகம், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள், மாநகராட்சி உயர் அதிகாரிகள், ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நடைபாதை வளாகத்தை திறந்து வைத்த முதல்வர், அமைச்சர்கள் பனகல் பூங்காவில் தொடங்கி 750 மீட்டர் நீளம் கொண்ட நடைபாதை வளாகத்தில் நடந்து சென்று பார்வையிட்டனர். பிறகு முதல்வர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அற்புதமான, அழகான நடைபாதை 40 கோடியிலும், சாலை வசதி 20 கோடியிலும் அமைக்கப்பட்டு துவக்கி வைக்கப்பட்டுள்ளது. உலக தரத்தில் ெபாதுமக்கள் வசதிக்காக இந்த சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் தமிழகத்திலுள்ள 11 நகரங்களிலும் பணிகள் நடந்து வருகிறது. இந்தியாவில் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழகம் 8வது இடத்தில் உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சென்னையில் பிற சாலைகள் மேம்படுத்தப்படும். அதற்கான நிதி ஆதாரம் திரட்டப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

ஒருமணி நேரம் இலவச வைஃபை

நடைபாதை வளாகத்தில் இலவச வைஃபை சேவை வழங்கப்படுகிறது. பொதுமக்கள் முதல் ஒரு மணி நேரம் இலவசமாக பயன்படுத்தலாம். அதன்பிறகு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும்.

லேசர் நிகழ்ச்சி

நடைபாதை வளாகத்தை முதல்வர் திறந்து வைத்தவுடன் வண்ணமயமான லேசர் நடனம் நடத்தப்பட்டது. முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் பார்வையிட்டனர். மேலும், நடைபாதை வளாகத்தின் இரு பகுதிகளிலும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. குறிப்பாக பொம்மை நடனம், மேற்கத்திய இசை பல்வேறு குழுக்கள் மூலம் காட்டப்பட்டது.


Tags : corridor ,Pondibazar The Smart City Project ,complex , complex at Bandipajar , Rs 39 crore, Smart City Project
× RELATED ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரை...