×

பொதுமக்கள் இனி தகவல்களை பெறலாம் தலைமை நீதிபதி ஆர்டிஐ வரம்புக்கு உட்பட்டவர் : சுப்ரீம் கோர்ட் வரலாற்று தீர்ப்பு

புதுடெல்லி: ‘உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகமும் ஒரு பொது அதிகார அமைப்பாகும். எனவே, அது தகவல் உரிமை அறியும் சட்டத்தின் (ஆர்டிஐ) வரம்புக்கு உட்பட்டதே. அதேசமயம், ஆர்டிஐ-யை நீதித்துறையை கண்காணிக்கும் கருவியாக பயன்படுத்தக் கூடாது. நீதித்துறையின் சுதந்திரத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது’’ என உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி உள்ளது. தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் எஸ்.சி.போஸ், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரங்களை வழங்க வேண்டுமென ஆர்டிஐ சட்டத்தின் கீழ் கடந்த 2007ல் மனு செய்தார். இதை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இதை எதிர்த்து மத்திய தலைமை தகவல் ஆணையரிடம் மனுதாரர் மேல்முறையீடு செய்தார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் ஆர்டிஐ வரம்புக்குள் வருவதால், நீதிபதிகளின் சொத்து விவரங்களை வெளியிடுமாறு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றம் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த தனி நீதிபதி, ‘‘நீதிபதிகளின் சொத்து விவரங்களை வெளியிடலாம்’’ என உச்ச நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார். இதற்கு அப்போதைய தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் வெளிப்படைத்தன்மைக்கு அப்பாற்பட்டது என கருத்து தெரிவித்தார்.

மேலும், உச்ச நீதிமன்ற பதிவாளர், மத்திய பொது தகவல் அலுவலர் ஆகியோர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தனர். இம்மனு  நீதிபதிகள் அஜித் பிரகாஷ் ஷா, விக்ரம்ஜித் சென் மற்றும் முரளிதர் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் ஆர்டிஐ வரம்புக்கு உட்பட்டதே என கடந்த 2010ல் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் என்.வி.ரமணா, சந்திராசூட், தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. இறுதி வாதம் முடிந்த நிலையில், கடந்த ஏப்ரல் 4ம் தேதி தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு: முக்கியமான இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியது. இதில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் ஒரே தீர்ப்பையும், நீதிபதிகள் ரமணா, சந்திராசூட் ஆகியோர் தனித்தனியாக வெவ்வேறு தீர்ப்பையும் வழங்கினர்.

88 பக்கங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பில் பல்வேறு அம்சங்கள் உறுதிபடுத்தப்பட்டன. அத்தீர்ப்பை செல்லும் என நீதிபதிகள் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும்,  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் ஆர்டிஐ வரம்புக்கு உட்பட்டதே என்றும் உறுதி செய்தனர். தலைமை நீதிபதியின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தகவல் அறியும் உரிமையும், தனிநபர் உரிமையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும். இவை இரண்டும் ஒன்றை விட மற்றொன்று முன்னுரிமை பெற்று விட முடியாது. தனிநபர் உரிமை என்பது மிக முக்கியமான அம்சமாகும். எனவே, தலைமை நீதிபதி அலுவலகம் பற்றிய தகவல்களை வெளியிட முடிவெடுக்கும்போது, வெளிப்படைத்தன்மையும், தனிநபர் உரிமையையும் நடுநிலையாக கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். எந்த வகையிலும் வெளிப்படைத்தன்மை என்பது நீதித்துறையின் சுதந்திரத்தை குறைத்து மதிப்பிடாது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் ஓர் பொது அதிகார அமைப்பாகும். எனவே அது, ஆர்டிஐ வரம்புக்கு உட்பட்டதே. அதேசமயம், வெளிப்படைத்தன்மையை காரணம் காட்டி, நீதித்துறையை கண்காணிக்கும் கருவியாக ஆர்டிஐ சட்டத்தை பயன்படுத்தக் கூடாது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

நீதிபதி சந்திராசூட் தனது தீர்ப்பில், ‘‘நீதிபதிகள் அரசியலமைப்பு பதவியை அனுபவித்து, பொது கடமையை நிறைவேற்றுவதால், நீதித்துறை தனித்து செயல்பட முடியாது’’ என்றார். நீதிபதி ரமணா தனது தீர்ப்பில், ‘‘தனிநபர் உரிமையையும், தகவல் அறியும் உரிமையையும் சமமாக பாவித்து, நீதித்துறையின் சுதந்திரம் மீறப்படாமல் பாதுகாத்திட வேண்டும்’’ என்றார். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார். அதற்கு முன்பாக அவர் பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்து வருகிறார். அந்த வகையில் அயோத்தி வழக்குக்கு பிறகு தலைமை நீதிபதி அமர்வு வழங்கியுள்ள 2வது முக்கிய வழக்கின் தீர்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

கொலீஜியம் பரிந்துரையின் தகவல்களுக்கு கட்டுப்பாடு

இந்த வழக்கில், நீதிபதிகள் நியமனம் தொடர்பான உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் தரப்பில் பரிமாறப்படும் தகவல்கள், குறிப்பிட்ட நீதிபதியை பரிந்துரைப்பது ஏன் என்பதற்கான தகவல்களை வெளியிட வேண்டுமென மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதற்கு கட்டுப்பாடு விதித்துள்ள நீதிபதிகள், ‘‘கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளின் பெயர்கள் மட்டுமே வெளியிடப்படும், அதற்கான காரணங்களை வெளியிட முடியாது’’ என தீர்ப்பில் உத்தரவிட்டனர்.

எந்தெந்த கேள்வி கேட்கலாம்?


* ஆர்டிஐ சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஒவ்வொரு அலுவலகத்தில் உள்ள தகவல் அலுவலரும் பதில் அளிக்க வேண்டும்.
* தேச பாதுகாப்பு, ராணுவம் தொடர்பான சில கேள்விகளுக்கு பதிலளிக்க இச்சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
* நீதிபதிகள் குறித்த கேள்விகளில், தனிமனித உரிமை பாதிக்கக் கூடாது.
* ஆர்டிஐ சட்டத்தை பயன்படுத்தி நீதிபதிகளை கண்காணிக்கும் வகையில்  பயன்படுத்தக் கூடாது.

Tags : public ,RTI: Supreme Court , public ,no longer, Chief Justice,subject to RTI
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பு அம்மை...