×

கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயனம் மூலம் பழுக்க வைத்த 10 டன் வாழைத்தார்கள் பறிமுதல்

* அதிகாரிகள் அதிரடி
* 3 வியாபாரிகள் மீது வழக்கு

சென்னை: கோயம்பேடு பழ மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 10 டன் செயற்கை முறையில் பழுக்க வைத்த வாழைத்தார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இங்கு மொத்தமாகவும், சில்லறையாகவும் காய்கறிகள், பழங்களை பொதுமக்கள், வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். அந்த வகையில், இங்கு 100க்கும் மேற்பட்ட வாழைப்பழ மொத்த விற்பனை அங்காடிகள் உள்ளன. இங்கு விற்பனை செய்யப்படும் வாழைத்தார்கள் செயற்கை முறையில் ரசாயனம் பயன்படுத்தி பழுக்க வைக்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

இந்நிலையில், சென்னை மண்டல உணவு பாதுகாப்பு துறை அதிகாரி டாக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர், நேற்று அதிகாலை 34க்கும் மேற்பட்ட வாழைப்பழ கடையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, 3 கடைகளில் ரசாயன முறையில் பழங்கள் பழுக்க வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து 10 டன் வாழைத்தார்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் பழங்களை பழுக்க வைக்கும் சிவப்பு நிற ரசாயன திரவம் மற்றும் எத்தனால் வாயு ஆகியவையும் மூட்டை மூட்டையாக இருந்தது தெரியவந்தது. அவற்றையும் அதிகாரிகள் கைப்பற்றினர். இதையடுத்து 3 வியாபாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில், ‘‘இந்த சோதனை தொடரும். அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக ரசாயனம் பயன்படுத்தினால் உரிமம் ரத்து செய்யப்படும்’’ என்றனர்.

Tags : Coimbatore , 10 tons, bananas seized ,chemicals , Coimbatore market
× RELATED பறக்கும் படையால் வியாபாரம் பாதிப்பு