×

திருவண்ணாமலையில் ஆலோசனை கூட்டம் வேண்டியவங்களுக்கு டெண்டர்... தேர்தல் வேலைக்கு நாங்களா? நிர்வாகிகள் வாக்குவாதத்தால் பாதியில் வெளியேறினார் அமைச்சர்

திருவண்ணாமலை: வேண்டியவங்களுக்கு டெண்டரு, உள்ளாட்சி தேர்தலில் வேலை செய்ய மட்டும் நாங்களா? என்று திருவண்ணாமலையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனிடம், அதிமுக நிர்வாகிகள் கடும்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து, நாைளயும், நாளை மறுநாளும் விருப்ப மனுக்கள் பெறப்பட உள்ளது. இதையொட்டி, திருவண்ணாமலை திருவூடல்  தெருவில் உள்ள அதிமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நேற்று நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.  இதில் உள்ளாட்சி தேர்தலையொட்டி மேற்கொள்ள வேண்டிய பணிகள், விருப்ப மனுக்கள் பெறுவது குறித்து ஆலோசனை நடத்தினர்.

கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் கட்சி நிர்வாகிகள் சிலர் திடீரென எழுந்து நின்று, `உள்ளாட்சி தேர்தலில் வேலை செய்ய மட்டும் நாங்க தேவைப்படுறோம், ஆனால், டெண்டரை மட்டும் வேண்டியவங்களுக்கு தருவது என்ன நியாயம்,  அதுக்கு நாங்க தேவையில்லையா?’ என கேள்வி எழுப்பினர். மேலும் அவர்கள், ``கடந்த சில நாட்களுக்கு முன்பு 10 கோடியில் திருவண்ணாமலை நகரில் சாலை மற்றும் கால்வாய் சீரமைப்பு பணிக்கான டெண்டர் விடப்பட்டது. இதில்  வேண்டியவங்களுக்கு மட்டுமே பணிகள் வழங்கப்பட்டுள்ளது. ஏன் இந்த பணிகளை பிரித்து, கட்சியில் உள்ள மற்ற நிர்வாகிகளுக்கு வழங்கவில்லை. நாங்களும் கட்சியில் தான் இருந்து வருகிறோம்’’ என்றனர்.

இதுதொடர்பாக அமைச்சருக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே சிறிது நேரம் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்த சிலர் அவர்களை சமரசம் செய்தனர். ஆனால், நிர்வாகிகள் அதனை ஏற்காமல் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த அமைச்சர், கூட்ட அரங்கில் இருந்து பாதியிலேயே வெளியேறி, கட்சி அலுவலக அறைக்கு சென்றார். மேலும், வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுகவினரும் அலுவலகத்தை விட்டு வெளியேறினர். இதையடுத்து,  முக்கிய நிர்வாகிகள் சிலரை மட்டும் அமைச்சர் தனது அறைக்குள் அழைத்து நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார். ஆலோசனை கூட்டத்திலேயே இந்த நிலை என்றால் உள்ளாட்சி தேர்தலை எப்படி சந்திக்க போகிறோம்? என அதிமுக  தொண்டர்கள் புலம்பியபடி சென்றனர்.

Tags : meeting ,Thiruvannamalai ,executives ,Minister , Thiruvannamalai, Tender, Election
× RELATED 1300 மெட்ரிக் டன் உரம் கொள்முதல் * ரயில்...