×

மேட்டூர் அணையில் இருந்து வீணாகும் உபரி நீரை திருப்பி விடும் திட்டத்துக்கு 565 கோடி ஒதுக்கீடு: அரசு உத்தரவு

சென்னை: பருவமழை காலகட்டத்தில் 93 டிஎம்சி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணை நிரம்பி வரும் நிலையில், அங்கிருந்து உபரி நீர் வீணாக கடலில் கலக்கிறது. குறிப்பாக, கடந்தாண்டு மட்டும் தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில் 25  நாட்களில் 18 டிஎம்சி வீதம் 450 டிஎம்சி நீர் வீணாக கடலில் கலந்தது. இவ்வாறு வீணாகும் நீரை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்காததால் கடந்தாண்டு ஜனவரி முதல் தமிழகத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதை தொடர்ந்து  அணைகளில் இருந்து வெளியேறும் உபரி நீரை ஏரி, குளங்களுக்கு திருப்பி விட தமிழக அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் சட்டசபையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இதை தொடர்ந்து  இந்த திட்டத்துக்கு பொதுப்பணித்துறை நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி தலைமையிலான பொறியாளர்கள் குழுவினர் விரிவான அறிக்கை தயார் செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்தனர்.

அந்த அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்த நிலையில், தற்போது இப்பணிகளை மேற்கொள்ள 565 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசு செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, 565 கோடி செலவில் மேட்டூர் அணையில்  இருந்து மெச்சேரி, நங்கவல்லி, வந்தவாசி, ஜலகண்டபுரம், தாரமங்கலம், கொங்கநாபுரம், மகுடஞ்சாவடி, இடைப்பாடி தாலுகாக்களில் உள்ள குளங்களை நிரப்புவது, ெகங்கவல்லி தாலுகாவில் உள்ள சொக்கனூர் அகரம் கிராமத்தில் புதிதாக குளம்  அமைப்பது, மேட்டூர் அணை உபரி நீரை காய்க்கான்வளவு காட்டாறு முதல் காரியக்கோயில் அணை வரை திருப்பி விடுவது, ஓமலூர் தாலுகாவில் கொட்டைமேடு கிராமத்தில் தடுப்பணை கட்டுவது, நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில்  உள்ள ஆனங்கூர் கிராமத்தில் ராஜவாய்க்கால் இடையே பாலம் அமைப்பது, எடப்பாடியில் சரபங்கா ஆற்றை மேம்படுத்துவது, மேட்டூர் மேற்கு பேங்க் கால்வாயில் புதிதாக பாலங்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.  

இந்த திட்டத்தின் மூலம் 555 மில்லியன் கன அடி வீதம் உபரி நீர் மேட்டூர் அணையில் இருந்து திருப்பி விடப்படுகிறது. இதன் மூலம் இடைப்பாடி தாலுகாவில் 33 குளம், எம்.கள்ளிப்பட்டியில் 67 குளங்கள் உட்பட அப்பகுதியை சுற்றியுள்ள  குளங்கள் பயன்பெறுகிறது. இந்த திட்டத்தின் மூலம் 4,238 ஏக்கர் பயன்பெறுகிறது. இந்த திட்டத்திற்காக நடப்பாண்டு நிதியில் இருந்து 50 கோடியும், அடுத்த இரண்டு நிதி ஆண்டுகளில் இருந்து 515 கோடியும் விடுவிக்கப்படுகிறது. மேட்டூர் உபரி  நீரை திருப்பி செல்ல குழாய்கள் பதிக்க 241 ஏக்கர் பட்டா நிலங்களை கையகப்படுத்தவும், இப்பணிகளுக்கு விரைவில் டெண்டர் விடப்பட்டு அடுத்த ஆண்டு முதல் பணிகளை தொடங்க பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது.


Tags : Mettur dam , Mettur Dam, surplus water, Rs 565 crore allocated, Govt
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி