பாலியல் பலாத்கார வழக்கில் முகிலனுக்கு ஜாமீன்: கரூரில் தங்கி கையெழுத்திட நிபந்தனை

மதுரை: பாலியல் பலாத்கார வழக்கில் சமூக ஆர்வலர் முகிலனுக்கு ஜாமீன் வழங்கிய ஐகோர்ட் கிளை, கரூரில் தங்கி கையெழுத்திட வேண்டுமென நிபந்தனை விதித்துள்ளது. ஈரோடு மாவட்டம், சென்னிமலையைச் சேர்ந்தவர் முகிலன் (எ)  சண்முகம் (53). சமூகப்போராளியான இவர், இயற்கை வள பாதுகாப்பு, ஜல்லிக்கட்டு போராட்டம் உள்ளிட்ட பல சமூக பிரச்னைகளில் தீவிரமாக செயல்பட்டார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சென்னையில் கடந்த பிப். 15ல்  பேட்டியளித்த அவர், அதன் பின் மாயமானார்.மாயமான வழக்கை சென்னை ஐகோர்ட், சிபிசிஐடிக்கு மாற்றியது. போராட்டத்தில் பங்கேற்ற ஒரு பெண்ணை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக, குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் பதிவு  செய்த வழக்கும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இதனிடையே, கடந்த ஜூலை 6ம் தேதி திருப்பதி ரயில் நிலையத்தில் முகிலனை, சிபிசிஐடி போலீசார் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் ஜாமீன் கோரி முகிலன் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. முகிலனுக்கு ஜாமீன் வழங்க அரசு வக்கீல் எதிர்ப்பு தெரி வித்தார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:மனுதாரர் மீதான குற்றச்சாட்டு கடுமையானதாக  இருந்தாலும், போலீஸ் விசாரணை முடிந்து விட்டது. இறுதி அறிக்கை கூட தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 53 வயதாகும் மனுதாரருக்கு திருமணமாகி, குழந்தைகள் உள்ளன. இவர், தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறப்படும் புகார் ஏற்புடையதல்ல.  ஏனெனில் அவர், தனது மனைவியை விவாகரத்து செய்தால்தான் இவரை திருமணம் செய்ய முடியும். புகார் கூறுபவர் 37 வயதானவர். ஒன்றும் விபரம் தெரியாதவர் அல்ல.

சாப்ட்வேர் துறையைச் சேர்ந்தவர். அதுவும் 2017ல் நடந்ததாக கூறப்படும் சம்பவத்திற்கு, கடந்த மார்ச் 30ல் தான் புகார் தந்துள்ளார். மனுதாரருடன் பல போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். மகாபாரத போரில் அபிமன்யு சக்கர வியூகத்தில்  மாட்டிக்கொண்டதைப் போல, மனுதாரர் மன்மத வியூகத்தில் மாட்டிக் ெகாண்டார். அவருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. கரூரில் தங்கியிருந்து இரு நாட்களுக்கு ஒருமுறை காலை 10.30 மணிக்கு, கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்திட  வேண்டும். விசாரணை நீதிமன்றம் வழக்கை விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>