×

புதிய கூட்டணி அரசு அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களுடன் உத்தவ் தாக்கரே ஆலோசனை: பேச்சுவார்த்தை சரியான திசையில் செல்வதாக பேட்டி

மும்பை: மகாராஷ்டிராவில் புதிய கூட்டணி ஆட்சியமைப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களுடன் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று ஆலோசனை நடத்தினார்.மகாராஷ்டிராவில் பாஜ.வை ஆட்சியமைக்க ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைத்த போதிலும், அந்த கட்சி ஆட்சியமைக்க மறுத்து விட்டது. இதைத் தொடர்ந்து இரண்டாவது பெரிய கட்சி என்ற முறையில் மாநிலத்தில் ஆட்சியமைக்க சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்து, 24 மணிநேரம் அவகாசம் அளித்தார். ஆனால், அந்த அவகாசம் முடிவடைவதற்கு முன்பே ஆளுநரின் பரிந்துரையை ஏற்று மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை நேற்று முன்தினம் அமல்படுத்தியது மத்திய அரசு. மத்திய அரசின் இந்த தடாலடி நடவடிக்கைக்கு சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துவிட்டது ஒருபுறம் என்றாலும், மற்றொருபுறம் தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் சேர்ந்து புதிய கூட்டணி அரசு அமைக்கும் சிவசேனாவின் முயற்சியும் தீவிரமடைந்துள்ளது. காங்கிரஸ் கட்சியும் தனது கொள்கையை சற்றே ஒதுக்கிவைத்துவிட்டு சிவசேனா தலைமையில் அமையப் போகும் புதிய அரசுக்கு ஆதரவளிப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளது. புதிய ஆட்சியமைப்பது தொடர்பாக சரத் பவாருடன் ஆலோசிக்க அகமத் பட்டேல், மல்லிகார்ஜூன் கார்கே, கே.சி.வேணுகோபால் ஆகிய மூத்த தலைவர்கள் அடங்கிய குழுவை நேற்று முன்தினம் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அமைத்தார். இந்த மூன்று தலைவர்களும் நேற்று முன்தினம் உடனடியாக மும்பைக்கு வந்து சரத் பவாரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் புதிய கூட்டணி ஆட்சியமைப்பதற்காக முயற்சி வேகமெடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக நேற்று மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப் தோரத், முன்னாள் முதல்வர் அசோக் சவான், மூத்த தலைவர் மாணிக்ராவ் தாக்கரே ஆகியோரை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சந்தித்து மாநிலத்தில் புதிய கூட்டணி ஆட்சியமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். மும்பை புறநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்த சந்திப்பு நடந்தது. இச்சந்திப்பு பிறகு பேட்டியளித்த உத்தவ் தாக்கரே, ‘‘காங்கிரஸ் தலைவர்களுடனான பேச்சுவார்த்தை சரியான திசையில் செல்கிறது. உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும்’’ என்றார்.

பாலாசாகேப் தோரத் கூறுகையில், ‘‘உத்தவ் தாக்கரேயுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது. நாங்கள் சந்தித்து கொண்டதே ஒரு ஆக்கப்பூர்வமான விஷயம்தான்’’ என்றார். மாணிக்ராவ் தாக்கரே கூறுகையில், ‘‘அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கான உகந்த சூழலை உருவாக்குவதற்காகவே இந்த சந்திப்பு நடந்தது’’ என்றார். இதற்கிடையே, நெஞ்சுவலிக்கு சிகிச்சை பெறுவதற்காக பாந்த்ராவில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவுத்தையும் பாலாசாகேப் தோரத், அசோக் சவான், மாணிக்ராவ் தாக்கரே ஆகியோர் நேற்று காலை சந்தித்து பேசினர். இந்நிலையில் நேற்று மதியம் சஞ்சய் ராவுத் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். அப்போது பேட்டி அளித்த அவர், ‘‘மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வராக சிவசேனாவை சேர்ந்த ஒருவர் வருவார்’’ என்றார்.

Tags : Uddhav Thackeray ,leaders ,Congress ,coalition government ,formation , New coalition government, Congress leaders, Uthav Thackeray
× RELATED உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு உத்தவ் தாக்கரே பதிலடி.!!