×

கடலுக்கு செல்லும் மீனவர்கள் விபத்தில் இறந்தால் 10 லட்சம் நிவாரண நிதி: ஆந்திரா அமைச்சரவை முடிவு

திருமலை: ஆந்திராவின் குண்டூர் மாவட்டம் வெலகம்பூண்டியில் உள்ள தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. பின்னர், செய்தித் துறை அமைச்சர் பேர்னி நானி கூறியதாவது:மாநிலம் முழுவதும் மணல் கடத்தல் மற்றும் அரசு நிர்ணயித்த தொகையை காட்டிலும் அதிக விலைக்கு விற்பனை செய்தால் 2 லட்சம் வரை அபராதம், 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கவும், முறைகேடாக மணல் பதுக்கி வைப்பது, மொத்த விற்பனை செய்வது தெரியவந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் விதமாக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.  தற்போது 9ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை 37.21 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.

இதில் 3265 உயர்நிலை பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி படித்து வருகின்றனர். 11 லட்சத்து 37 ஆயிரத்து 43 மாணவர்கள் ஆங்கில கல்வி படித்து வருகின்றனர். தனியார் பள்ளிகளில் 98.5 சதவீதம் ஆங்கில வழிக் கல்வியை பயின்று வருகின்றனர். ஆனால் அரசு பள்ளியில் 34 சதவீதம் மட்டுமே ஆங்கில வழிக்கல்வி உள்ளது. எனவே பின்தங்கிய மக்களின் பிள்ளைகளும் ஆங்கில வழிக் கல்வியை கற்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் அதற்காக தான் ஆங்கில வழி கல்வி கொண்டுவரப்படுகிறது. 21ம் தேதி தேசிய மீனவர் தினத்தையொட்டி   கடலுக்கு செல்லக்கூடிய மீனவர்கள் விபத்தில் உயிர் இழந்தால் அவர்களுக்கு வழங்கும் 5 லட்சம் இழப்பீடு தொகையை 10 லட்சமாக உயர்த்தப்படுகிறது. காணிப்பாக்கம், ஸ்ரீகாளஹஸ்தி உள்ளிட்ட 8 கோயில்களுக்கு அறங்காவலர் குழு விரைவில் அமைக்கப்படும்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : fishermen ,accident , Sea, Fishermen, Andhra Cabinet
× RELATED இலங்கை சிறையிலிருந்து...