×

ராதாபுரம் தொகுதி தேர்தல் வழக்கு: நவ.22க்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி: தமிழகத்தின் ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிடுவது தொடர்பான வழக்கை நவம்பர் 22ம் தேதிக்கு உச்ச நீதிமன்ற நேற்று ஒத்தி வைத்துள்ளதால், அதுவரை தற்போது உள்ள தடை உத்தரவு தொடர்ந்து நீடிக்கும். கடந்த 2016ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் தி.மு.க.வின் சார்பில் எம்.அப்பாவும், அ.தி.மு.க சார்பில் ஐ.எஸ்.இன்பதுரையும் போட்டியிட்டனர். இதில், இன்பதுரை 69,590 வாக்குகளையும் எம்.அப்பாவு 69,541 வாக்குகளையும் பெற்றனர். இதையடுத்து 49 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து அப்பாவு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடைசி மூன்று சுற்று வாக்குகள் மற்றும் தபால் வாக்குகளை தாக்கல் செய்ய தெரிவித்ததோடு அவற்றை தற்போது எண்ணியும் முடித்துள்ளது.

இந்த நிலையில் இன்பதுரை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘மறுவாக்கு எண்ணிக்கை என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய முடியாது. ஆனால் வாக்கு எண்ணிக்கை முடிவை மட்டும் வெளியிட தடை விதிக்கப்படுகிறது’ என உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அப்பாவு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ‘‘ராதாபுரம் தொடர்பான வழக்கு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதால் அதன் முடிவுகளை வெளியிட நீதிமன்றம் உடனடியாக உத்தரவிட வேண்டும். மேலும் வழக்கு தொடர்பாக வாதங்களை மேற்கொள்ள எங்களுக்கு அவகாசம் வழங்க வேண்டும்’’ என தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘‘இது தகுதி நீக்க வழக்கு கிடையாது என்பதால் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் நாங்கள் தலையிட வேண்டுமா’’ என்று கேள்வியெழுப்பினார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “ராதாபுரம் தொகுதி தொடர்பான வழக்கை நவம்பர் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம்’’ என உத்தரவிட்டனர். இதில் வழக்கில் தற்போது உள்ள நிலையே தொடரும் என்பதால் ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட இருக்கும் தடையானது அடுத்த விசாரணை வரை தொடரும்.

Tags : Radhapuram , Radhapuram constituency election case
× RELATED தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர்...