×

சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்கும் விவகாரம்: மறுசீராய்வு மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

புதுடெல்லி: சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக வரும் 16ம் தேதி அதாவது நாளை மறுநாள் திறக்கவுள்ள நிலையில் சீராய்வு மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று காலை பிறப்பிக்க உள்ளது. கேரளாவில் உள்ள சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு 10 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது கிடையாது. இது காலம், காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஐதீகம். இந்த நிலையில் இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இதையடுத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு கேரளாவில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என கடந்த ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்புக்கு எதிராக கேரளா மட்டுமில்லாமல் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி கேரளாவைச் சேர்ந்த நாயர் சர்வீஸ் சொசைட்டி உள்பட பல்வேறு அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் தரப்பு என மொத்தம் 51 சீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு வாதங்கள் அனைத்தையும் முடித்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மூத்த நீதிபதிகள் ரோகிண்டன் பாலி நாரிமன், ஏ.எம்.கன்வீல்கர், டி.ஒய்.சந்திரசூட் மற்றும் பெண் நீதிபதியான இந்து மல்கோத்ரா ஆகிய 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்க உள்ளது.

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அப்போது நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கானோர் குவிவார்கள்.. இந்த சூழலில்  உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயிலுக்கு வரும் பெண்களுக்கு உதவி:
சபரிமலை கோயிலில் இளம்பெண்கள் தரிசனம் செய்ய அனுமதித்து உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு உத்தரவிட்டதை தொடர்ந்து, கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து அம்மிணி, கனக துர்கா  ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சென்று தரிசனம் செய்தனர். அதன் பிறகுதான், கேரளாவில் கலவரம் வெடித்தது. இந்நிலையில், பிந்து அம்மிணி நேற்று கண்ணூரில் அளித்த பேட்டியில், ‘‘சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்யும் என்று கருதுகிறேன். இந்தாண்டு பெண்கள் கோயிலுக்கு வந்தால் அவர்களுக்கு உதவி செய்வோம்’’ என்றனர்.

Tags : Supreme Court ,adolescents ,Sabarimala ,girls , Sabarimala, adolescent, Supreme Court
× RELATED ஓபிசி இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக...