×

இலங்கை அதிபர் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது: நாளை மறுநாள் தேர்தல்

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் நேற்று நள்ளிரவுடன் பிரசாரம் முடிவடைந்தது.
இலங்கையில் நாளை மறுநாள் அதிபர் தேர்தல் நடக்கிறது. இத்தேர்தல் களத்தில் லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக, முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே போட்டியிடுகிறார். அவருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இதில் சஜித் பிரேமதாசாவுக்கு தமிழர் கட்சி கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கோத்தபய ராஜபக்சேக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தது. ஆனால், இதற்கு அக்கட்சியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தலைமையில் ஒரு பிரிவினர் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளனர். இவ்விருவரை தவிர, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் எம்பி சிவாஜிலிங்கம் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் இம்முறை அதிபர் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனால் வாக்குச்சீட்டு பெரிய அளவில் இருக்கும். இதை வேட்பாளர்களின் பெயர்களை படித்துப்பார்க்க, சராசரியாக ஒரு வாக்காளருக்கு 2 நிமிடமாவது ஆகும் என்பதால், தேர்தல் வாக்குப்பதிவு நேரத்தை ஒரு மணி நேரம் அதிகரிக்க அனைத்து அரசியல் கட்சியினரும் ஒப்புதல் அளித்திருந்தனர். இதன்படி 16ம் தேதி காலை 7 மணியில் இருந்து மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும். இதற்கு முன்பு மாலை 4 மணி வரை மட்டுமே வாக்குப்பதிவு நடைபெறும். இந்த தேர்தலுக்கான பிரசாரம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தது.



Tags : election ,Sri Lankan , Sri Lankan ,presidential, election ends,tomorrow's election
× RELATED மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஏப்.6ல் வெளியீடு