×

தனியார் பேருந்து மோதி உணவு டெலிவரிக்கு சென்றவர் பலி: டிரைவர் கைது

பெரம்பூர்: பெரம்பூர் ஓட்டேரி, பாஷ்யம் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (24). உணவு நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு கொன்னூர் நெடுஞ்சாலையில் ராமலிங்கபுரம் அருகே உணவு டெலிவரி செய்வதற்காக சதீஷ்குமார் பைக்கில் சென்றார். அப்போது பக்கவாட்டில் வந்த ஒரு தனியார் பேருந்து சதீஷ்குமாரின் பைக் மீது மோதியது. இதில் அவர் பைக்கில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது பேருந்தின் பின்பக்க சக்கரம் சதீஷ்குமார் மீது ஏறி இறங்கியது. படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள், வரும் வழியிலேயே சதீஷ்குமார் இறந்ததாக தெரிவித்தனர். புகாரின்பேரில் அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சீர்காழியை சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் பாலமுருகன் (36) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

* வேளச்சேரி, கோகுலம் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (69). இவர், நேற்று முன்தினம் இரவு சாலையை கடக்க முயன்றார். அப்போது, வேகமாக வந்த வாகனம் செல்வராஜ் மீது பலமாக மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராஜ் இறந்தார். இதுகுறித்து  கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.
* வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ரிஜிஸ்பாபு தலைமையில் தனிப்படை போலீசார், உதவி ஆய்வாளர் ராஜிவ் மற்றும் ராஜசிங் ஆகியோர் நேற்று முன்தினம் மாலை வில்லிவாக்கம் பஸ் நிலையத்தில் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான ஒரு வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில், சென்னை வில்லிவாக்கம் பாலாஜி (33). பெயின்டர். இவர் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து வில்லிவாக்கம் பகுதியில் விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடம் அரை கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
* திரு.வி.க நகர் நாகம்மாள் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி (34). நேற்று முன்தினம் இரவு இரு சக்கர வாகனத்தில் கான்ஸ்டபிள் ரோடு பெரம்பூர் ரயில்வே மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது பின்னால் பைக்கில் இருவர் வந்தனர். அதில் ஒருவன் மட்டும் பர்தா அணிந்திருந்தான். அவன், லட்சுமி கழுத்தில் அணிந்திருந்த நான்கரை சவரன் தங்கத் தாலியைப் பறித்து, அவரை தள்ளிவிட்டு தப்பினர். இதுகுறித்து ஐசிஎப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : bus delivery , Driver arrested,colliding ,private, bus delivery
× RELATED தனியார் பேருந்து மோதி உணவு டெலிவரிக்கு சென்றவர் பலி: டிரைவர் கைது