சென்னையில் உள்ள தெரு விளக்குகளை தொலை தூரத்திலிருந்து கண்காணிக்கும் வசதி

* ரூ.46 கோடி செலவில் அமல்  

* மாநகராட்சி திட்டம்

சென்னை: சென்னை உள்ள தெரு விளக்குளை தொலை தூரத்திலிருந்து கண்காணிக்கும் திட்டம் ₹46 கோடி செலவில் செயல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் மொத்தம் 2,87,968 தெருவிளக்குகள் உள்ளன. இவற்றில் 1,82,775 தெரு விளக்குகள் எல்இடி விளக்குகள். இந்த எல்இடி விளக்குகளால் சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மின் கட்டணம் ₹6 கோடியில் இருந்து ₹4.50 கோடியாக குறைந்துள்ளது. இந்நிலையில் தெரு விளக்குகளை தொலை தூரத்திலிருந்து கண்காணிக்கும் திட்டத்தை ₹46 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது, “சென்னை மாநகராட்சியில் தற்போது 1,82,775 எல்இடி விளக்குகள் உள்ளன. இவற்றில் 21,142 விளக்குகள் 150 வாட்ஸ் திறன் கொண்டவை.  மீதம் உள்ள 87,892 சாதாரண  விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை மாநகராட்சியில் இணைந்த பகுதிகளில் கம்பம் உள்ளிட்ட அனைத்து  கட்டமைப்பு வசதிகளுடன் 17,301 எல்இடி விளக்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த விளக்குகள் அனைத்தும் 7094 பில்லர் பாக்ஸ் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் எல்இடி விளக்குகள் அனைத்தையும் தொலை தூரத்திலிருந்து கண்காணிக்கும் திட்டம் செயல்படுத்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படி இந்த பில்லர் பாக்சுகள் சென்சார்கள் பொருத்தப்படும். அனைத்து விளக்குகளையும் இணைத்து ஒருங்கிணைந்த கண்காணிப்பு திட்டம் ஒன்று உருவாக்கப்படும். இதன் மூலம் ஒரே இடத்தில் இருந்து அனைத்து விளக்குகளையும் இயக்க முடியும். இந்த தெரு விளக்குகள் இருக்கும் இடமானது கூகுள் மேப்புடன் இணைக்கப்படும். இந்த விளக்குகளை கண்காணிக்க தனி மொபைல் செயலி உருவாக்கப்படும். மாநகராட்சி பொறியாளர் இந்த செயலி மூலம் தெருவிளக்குகளை இயக்க முடியும். இந்த திட்டம் மூலம் ஆண்டுக்கு ₹2.45 கோடி மின்சாரக் கட்டணத்தை குறைக்கலாம். சோதனை முறையாக இந்த திட்டம் தேனாம்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகில் உள்ள தெரு விளக்குகளில் செயல்படுத்தபட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து அனைத்து இடங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது” என்றனர்.

Related Stories:

>