×

திருவண்ணாமலையில் தடையை மீறி தீபமலை மீது ஏறி ஹெலிகேம் மூலம் வீடியோ எடுத்த நபர் யார்?...வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் விசாரணை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பின்புறம் உள்ள மலை மீது ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் மகாதீபம் ஏற்றுவது வழக்கம். அதன்படி வரும் டிசம்பர் 10ம்தேதி இந்த விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த மலை மீது ஏறுவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஆனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தடையை மீறி மலை மீது செல்வது, ஹெலிகேம் மூலம் வீடியோ எடுப்பது போன்றவை தொடர்ந்து நடந்து வருகிறது. திருவண்ணாமலைக்கு வரும் வெளிநாட்டு  சுற்றுலா பயணிகள் தடையை மீறி மலை ஏறுவதை தடுக்க வனத்துறையினர் ரமணாஸ்ரமம்  அருகிலும், மலைமீது உள்ள முளைப்பால் தீர்த்தம், கந்தாஸ்ரமம் ஆகிய  பகுதிகளில் எச்சரிக்கை அறிவிப்பு  பலகையை வைத்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் ஹெலிகேம் கேமரா மூலம் மலை உச்சியிலிருந்து படம் பிடித்துக்கொண்டிருப்பது தெரியவந்தது. இதனை அறிந்த சமூக ஆர்வலர் சிலர் மலை உச்சிக்கு சென்று அந்த நபரை வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வர முயன்றுள்ளனர். ஆனால் அந்த சுற்றுலா பயணி வர மறுத்து மலையிலிருந்து இறங்கி தப்பி சென்றுவிட்டாராம். இதையடுத்து வனத்துறையினர் திருவண்ணாமலையில் தங்கியுள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம், மலை மீது சென்ற நபரின் புகைப்படத்தை காண்பித்து இந்த நபர் யார்? எதற்காக ஹெலிகேம் மூலம் வீடியோ எடுத்தார்? தற்போது எங்கு சென்றுள்ளார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Thiruvannamalai , Thiruvannamalai, Barrier, Deepa Hill, Helichem, Foreign Tourist
× RELATED 1300 மெட்ரிக் டன் உரம் கொள்முதல் * ரயில்...