×

பாதுகாக்க வேண்டிய மாநகராட்சியே பாழாக்குவதா?...பாலாற்றில் குழி தோண்டி பிளாஸ்டிக் கழிவுகள் புதைக்கும் அவலம்

வேலூர்: வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. இங்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். வீடுகள், வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் குப்பைகளை அகற்றும் பணியில் 300க்கும் மேற்பட்ட மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் சுமார் 160 டன் குப்பைகள் அகற்றப்பட்டு சதுப்பேரியில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் கொட்டப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். மேலும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட் சதுப்பேரியில் குப்பை கொட்ட தடைவிதித்தனர். மேலும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி குப்பைகளை தரம் பிரித்து அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதன்படி கடந்த ஆண்டு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 40 திடக்கழிவு மேலாண்மை கிடங்குகள் அமைக்கப்பட்டது. இங்கு குப்பைகளை தரம் பிரித்து அகற்றும் பணியில் மகளிர் சுய உதவிக்குழுவினர் நியமிக்கப்பட்டனர். திடக்கழிவு மேலாண்மை கிடங்கிற்கு கொண்டு வரப்படும் குப்பைகள் மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்பட்டது. மக்கும் குப்பைகள் உரமாகவும், மக்காத குப்பைகள் சாலைகள் அமைக்கவும் பயன்படுத்தப்பட்டது. பின்னர் மக்காத குப்பைகள் ஒட்டுமொத்தமாக சேகரிக்கப்பட்டு அரியலூரில் உள்ள சிமென்ட் தொழிற்சாலைக்கு வழங்கப்பட்டது, இதனால் குப்பை அகற்றும் பிரச்னை ஓரளவிற்கு தீர்வு காணப்பட்டது. இந்நிலையில், வேலூர் மாநகராட்சி 2வது மண்டலத்திற்கு உட்பட்ட சத்துவாச்சாரி பாலாற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் மலைபோல் குவிந்துள்ளது. மேலும், அவற்றை பாலாற்றில் பள்ளம் தோண்டி புதைக்கப்படுகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், வேலூர் மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருவது பாலாறு. இது மணல் கொள்ளையர்களால் சீரழிந்துள்ள நிலையில், மாநகராட்சி நிர்வாகமானது தற்போது பாலாற்றில் குப்பைகளை கொட்டி சீரழித்து வருகிறது. பாலாற்றை பாதுகாக்காமல் இவ்வாறு செய்வதால் நிலத்தடி நீர்மட்டம் விழமாக மாறும் வாய்ப்பு உள்ளது. திடக்கழிவு மேலாண்மை கிடங்குகளில் கொட்டிவைத்து தரம் பிரிக்க வேண்டிய பிளாஸ்டிக் குப்பைகளை பாலாற்றில் பள்ளம் தோண்டி புதைக்கப்படுகிறது. அதேபோல், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களில் இருந்து அகற்றப்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள், உணவுக் கழிவுகள் ஆகியவை பாலாற்றில் கொட்டிவைத்து அசுத்தமாக்குகின்றனர். இதை தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டிய மாநகராட்சி அதிகாரிகளே, பாலாற்றில் மிகப்பெரிய பள்ளம் தோண்டி குப்பைகளை புதைப்பது நியாயமா? மேலும் தெர்மாகோல், காட்டன் பஞ்சு உள்ளிட்ட மருத்துவ கழிவுகளும் தீ வைத்து எரிக்கப்படுவதால் கரும்புகை மூட்டம் ஏற்படுகிறது. இதனால் நகரின் தூய்மை கேள்விக்குறியாவதோடு, சுற்றுசூழல் மாசு ஏற்படுகிறது. எனவே, பாலாற்றில் குப்பைகளை கொட்டி புதைப்பதை மாநகராட்சி அதிகாரிகள் கைவிட வேண்டும். இயற்கை வளங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட்டு வரும் கலெக்டர் சண்முகசுந்தரம் பாலாற்றில் குப்பைகள் கொட்டுவதை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், என்றனர்.

Tags : corporation ,Conservation Corporation of Destruction , Corporation, Pit, Plastic Waste
× RELATED வெள்ளம் பாதித்த குடியிருப்புகளை...