×

சாலையில் கொட்டப்படுவதால் துர்நாற்றம் செங்கல்பட்டில் குப்பை லாரிகள் சிறைபிடிப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் சாலையில் கொட்டப்படும் குப்பைகளால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. ஆத்திரமடைந்த மக்கள், குப்பை லாரிகளை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் பச்சையம்மன் கோயில் அருகே உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. தற்போது, குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளதால், சாலையோரத்தில் கொட்டப்படுகிறது. இதனால் கழிவுநீர் சாலையில் வடிந்தோடு கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. அப்பகுதியில் வசிக்கும் அம்பேத்கர் நகர், பச்சையம்மன் கோயில், மும்மலை பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் அவ்வழியாக நடந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

இவற்றுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் பல முறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள், இன்று காலை, நகராட்சி குப்பை லாரிகளை சிறைபிடித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழரசன் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்று கோஷம் எழுப்பினர். தகவல் அறிந்து நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, பொதுமக்கள் கூறுகையில், ‘குப்பை கிடங்குகளில் கொட்ட  இடம் இல்லாததால், தற்போது கிடங்கின் கேட் மற்றும் சாலையின் ஓரத்தில் அரை  கிலோ மீட்டர் தூரத்துக்கு கொட்டுகின்றனர். இதனால், கழிவுநீர் சாலையில்  வழிந்தோடுகிறது. அதை மிதித்து கொண்டுதான் வெளியிடங்களுக்கு செல்ல  வேண்டியுள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், நாய்கள்,  பன்றிகள் உள்ளிட்ட விலங்குகள் குப்பைகளை கிளறுவதால் கடுமையான துர்நாற்றம்  வீசுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். இதையடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



Tags : Chengalpattu , Garbage trucks in Chengalpattu caught
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 3 நாட்களுக்கு டாஸ்மாக் மூடல்