×

பெங்களூருவில் ஆதிசேஷன் சிலை அமைக்க 138 டயர் கொண்ட ராட்சத லாரியில் புறப்பட்ட 230 டன் பாறை

ஆற்காடு: பெங்களூருவில் ஆதிசேஷன் சிலை அமைக்க  கொண்டுவரப்பட்ட 230 டன் பாறை ஏற்றிய ராட்சத லாரி போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு ஆற்காடு பைபாஸ் சாலையில் நேற்று நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. கர்நாடக மாநிலம், பெங்களூரு தெற்கு ஈஜிபுரா பகுதியில் கோதண்டராம  சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் 64 அடி உயரம், 11 முகங்கள் மற்றும் 22 கைகள் கொண்ட விஸ்வரூப கோதண்டராம சுவாமி சிலை ஒரே கல்லில் செய்வதென முடிவு செய்யப்பட்டது. மேலும் சுவாமி சிலை, ஆதிசேஷன் சிலை (7 தலை பாம்பு) மற்றும் பீடத்துடன் சேர்த்து மொத்தம் 108 அடி உயரத்தில் அமைக்கவும் விழாக்குழுவினர் முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா, கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள மலை குன்றிலிருந்து  மத்திய, மாநில அரசுகளிடம் அனுமதியுடன் சுவாமி சிலை செய்ய 64 அடி நீளம், 26 அடி அகலம்,  7 அடி பருமனுடன் சுமார் 380 டன் எடையுள்ள பாறையும், ஆதிசேஷன் சிலை(7 தலை பாம்பு) செய்ய 24 அடி நீளம், 30 அடி அகலம், 12 அடி பருமனுடன் சுமார் 230 டன் எடையுள்ள பாறையும் நவீன இயந்திரங்கள் மூலம் சிறந்த 2017ம் ஆண்டு கொரக்கோட்டை கிராமம் மலை குன்றில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டு சுவாமி சிலை செய்வதற்கான 380 டன்  பாறை  மட்டும் 240 டயர்கள்  கொண்ட ராட்சத லாரியில் ஏற்றி பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் ஆதிசேஷன் சிலை செய்வதற்கான  230  டன் பாறையை பெங்களூருவுக்கு கொண்டு செல்ல 138 டயர்கள் கொண்ட ராட்சத லாரியில் ஏற்றும் பணி முழுவதும் நிறைவுபெற்று  அந்த லாரி  நேற்று முன்தினம் மாலை  அங்கிருந்து புறப்பட்டது.அப்போது ஏராளமானவர்கள் அங்கு திரண்டு கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்து லாரியை வழியனுப்பி வைத்தனர். இதனையடுத்து நேற்று முன்தினம் மாலை புறப்பட்ட லாரி தெள்ளார் வழியாக வந்தவாசி வந்தது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வந்தவாசியில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில்  திண்டிவனம் சாலையில் உள்ள நடுக்குப்பம் கிராமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு செய்யாறு வழியாக நேற்று அதிகாலை ராணிப்பேட்டை மாவட்ட எல்லையான அரும்பாக்கத்தை அடைந்ததும், தேசிய நெடுஞ்சாலை மாவட்ட போக்குவரத்து ரோந்துப் பணி போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கலவை கூட்டு ரோடு பகுதியில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு நேற்று காலை 8 மணியளவில் ராட்சத லாரி ஆற்காடு பைபாஸ் சாலை வந்தது. இந்நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழல் உள்ளதால், அதனை கருத்தில் கொண்டு ஆற்காடு பைபாஸ் சாலையில் நீண்டநேரமாக லாரி நிறுத்தப்பட்டது. முன்னதாக வழியெங்கிலும் பக்தர்கள் கற்பூரம் ஏற்றி மலர் தூவி வணங்கினர். இந்நிலையில் போக்குவரத்து பிரச்னை ஏற்படாமல் இருக்க இரவு நேரத்தில் இங்கிருந்து இந்த லாரி புறப்பட்டு செல்ல உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், வேலூர் சத்துவாச்சாரி ேமம்பாலம் பகுதியில் சுரங்க பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுவதால், ராட்சத லாரி தொடர்ந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து லாரியில் உடன் வந்தவர்கள் அப்பகுதிக்கு சென்று இடத்தை தொடர்ந்து ஆய்வு செய்துவருகின்றனர்….

The post பெங்களூருவில் ஆதிசேஷன் சிலை அமைக்க 138 டயர் கொண்ட ராட்சத லாரியில் புறப்பட்ட 230 டன் பாறை appeared first on Dinakaran.

Tags : Adisashan ,Bengaluru ,Arcot ,Dinakaran ,
× RELATED சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில்...