×

காவேரிப்பாக்கம் கோட்டை பகுதியில் வருமானத்தில் மட்டும் கறார்: பராமரிப்பின்றி பூட்டி கிடக்கும் அபயவரதராஜ பெருமாள் கோயில்..! அறநிலையத்துறை மீது பக்தர்கள் குற்றச்சாட்டு

காவேரிப்பாக்கம்: அவனி சதுர்வேதமங்களம் என்று அழைக்கக் கூடிய காவேரிப்பாக்கம், ஒரு காலத்தில் ஆன்மிகத்திலும், விவசாயத்திலும் கொடிக்கட்டி பறந்த ஊராக இருந்துள்ளது. இங்கு மிகவும் பழமை வாய்ந்த கொங்கணீஸ்வரர் கோயில், முத்தீஸ்வரர் கோயில், பஞ்சலிங்கேஸ்வரர் கோயில், சோமநாத ஈஸ்வரர் கோயில், அபயவரதராஜ பெருமாள் கோயில், ராமி விநாயகர் கோயில், உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கோயில்கள் அமையப்பெற்றுள்ளது. அக்காலத்தில் இக்கோயில்களுக்கு என்று நிலம்  மற்றும் கடைகள் ஒதுக்கப்பட்டு, அதன் மூலம் வருகிற வருவாயில் இக்கோயில்களை பராமரிப்பித்து வந்துள்ளனர். பின்னர், இரண்டாம் நந்திவர்மன், கிருஷ்ண தேவராயர் ஆட்சிக்காலங்களிலும் கோயில்கள் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளன என கல்வெட்டுகள் வாயிலாக தெரிய வருகிறது. இந்நிலையில், காவேரிப்பாக்கத்தின் கோட்டை கோயில் என்று அழைக்கப்பட்ட கொங்கணீஸ்வரர் கோயில், பஜார் வீதியில் உள்ள ராமி விநாயகர் கோயில், கோட்டை அபயவரதராஜ பெருமாள் கோயில் என மூன்று பழமை வாய்ந்த கோயில்களில் இன்று ஒருகால பூஜை நடைபெருவதே மிகவும் அரிதாகவே உள்ளது.  இக்கோயில்களுக்கு என்று பஜார் வீதியில் கடைகள் மற்றும் நிலங்கள்  உள்ளன. இந்த மூன்று கோயில்களும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இக்கோயில்களுக்கு என்று ஒதுக்கி உள்ள கடைகள் மற்றும் நிலங்களில்  வரும் வருவாய்,  அவ்வப்போது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வந்து வசூல் செய்து செல்வதாக கூறப்படுகிறது. ஆனால், மூன்று கோயில்களிலும் போதிய பராமரிப்பு இன்றி சிதிலமடைந்து வருவதாக பொது மக்கள் புகார் கூறுகின்றனர். இதனால் சிதிலமடைந்து வரும் கோயில்களை பராமரிப்பு செய்ய பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முன் வரும் போது அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தடையாக இருப்பதாக கூறுகின்றனர். இதன்காரணமாக ஆர்வமுடன் வருபவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வெளியே வந்து விடுவதாக கூறுகின்றனர். இதனால் தற்போது கோட்டை அபயவரதராஜ பெருமாள் கோயில், கோட்டை கொங்கணீஸ்வரர் கோயில், ராபி விநாயகர் கோயில் ஆகிய கோயில்கள்  பூஜைகள் இன்றி காணப்படுகின்றன. எனவே, அரசு அதிகாரிகள் பக்தர்கள் நலனைக் கருத்தில் கொண்டு இக்கோயில்களில் பூஜை நடைபெற அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வருகின்றன….

The post காவேரிப்பாக்கம் கோட்டை பகுதியில் வருமானத்தில் மட்டும் கறார்: பராமரிப்பின்றி பூட்டி கிடக்கும் அபயவரதராஜ பெருமாள் கோயில்..! அறநிலையத்துறை மீது பக்தர்கள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Kaveripakkam Castle ,Abhavaradaraja Perumal Temple ,Cauveripakkam ,Saturvedamas ,Karivakkam ,Abhavaradaraja ,Perumal Temple ,
× RELATED காவேரிப்பாக்கத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள்...