×

மகப்பேறு மருத்துவத்திற்காக திருவி. அரசு மருத்துவமனைக்கு லக்‌ஷயா தேசிய தரச்சான்றிதழ்

திருவில்லிபுத்தூர்: தமிழகத்தில், தாலுகா அளவில் திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை சிறந்த மருத்துவமனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், மகப்பேறு மருத்துவத்திற்கு மத்திய அரசின் லக்‌ஷயா தேசிய தரச்சான்றிதழும், உட்கட்டமைப்பு வசதிக்காக பிளாட்டின பட்டயமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் உள்ளிட்ட 16 பேர் பணியாற்றி வருகின்றனர். இங்கு மகப்பேறு மற்றும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை என மாதந்தோறும் 350க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் நடந்து வருகின்றன. மகப்பேறு மருத்துவத்திற்காக மத்திய அரசின் லக்‌ஷயா தேசிய தரச்சான்றிதழ் இம்மருத்துவமனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக திருவனந்தபுரத்தை சேர்ந்த டாக்டர் பீனா, நாக்பூரைச் சேர்ந்த தீபக் டோ கிரே  தலைமையிலான மத்திய மருத்துவக்குழுவினர், தமிழகத்தில் உள்ள தாலுகா மருத்துவமனைகளில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆய்வு செய்தனர். ஆக. 27, 28ம் தேதிகளில் திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தனர்.

சிகிச்சை  அளிக்கும் முறை, மருத்துவ வசதி, பராமரிப்பு, அறுவை சிகிச்சை அரங்கின்  பராமரிப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தனர். இதையடுத்து தமிழகத்தில் தாலுகா அளவிலான மருத்துவமனைகளில் திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை முதலாவதாக தேர்வு செய்யப்பட்டு, மகப்பேறு மருத்துவத்திற்காக லக்‌ஷயா தேசிய தரச்சான்றிதழ் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நோயாளிகளை கவனித்தல், மருத்துவமனையில் பெட் வசதி, ஏசி, பராமரிப்பு என உட்கட்டமைப்பு வசதிக்காக 100க்கு 98 மதிப்பெண் பெற்று பிளாட்டின பட்டயமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தாண்டு அறுவை சிகிச்சை பிரிவுக்கும், மகப்பேறு மருத்துவப்பிரிவுக்கும் ரூ.4 லட்சம் கூடுதலாக கிடைக்கும் என கூறப்படுகிறது.

திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் காளிராஜ் கூறுகையில், ‘‘எங்கள் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் மிகச் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். அனைவரது கூட்டு முயற்சியால், லக்‌ஷயா தேசிய தரச்சான்றிதழ் விருது கிடைத்துள்ளது. இது சிறப்பாக பணியாற்ற எங்களுக்கு உந்துதலாக இருக்கும்’’ என்றார். தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக செயல்படும் 20 அரசு மருத்துவமனைகளுக்கு லக்‌ஷயா தேசிய தரச்சான்றிதழ் விருது, பிளாட்டினம் பட்டயம் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : maternity clinic ,Government Hospital , Government Hospital
× RELATED முற்றுகை போராட்டம்