×

நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடி: சென்னை மாணவன், தந்தையை கைது செய்ய தடை நீடிப்பு

மதுரை: நீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்ட மோசடி வழக்கு தொடர்பாக சென்னை மாணவன் மற்றும் அவரது தந்தையை கைது செய்வதற்கான தடைைய உயர்நீதிமன்ற மதுரை கிளை நீடித்தது. மருத்துவக்கல்லூரிகளில் சேர்வதற்கான நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் உதித்சூர்யா பிடிபட்டார். இதைத்தொடர்ந்து உதித்சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் கைது செய்யப்பட்டனர். மேலும், ஆள் மாறாட்டம் செய்ததாக சென்னையை சேர்ந்த தனியார் மருத்துவக்கல்லூரிகளின் மாணவர்களான பிரவீன் (21), ராகுல் (20), இவர்களது தந்தையர் சரவணன் (44), டேவிஸ் (47), மாணவி பிரியங்கா அவரது தாய் மைனாவதி மற்றும் தர்மபுரியை சேர்ந்த மாணவர் இர்பான், அவரது தந்தை முகமது சபி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இதே வழக்கில் விசாரணைக்காக சம்மன் அனுப்பப்பட்டுள்ள சென்னையை சேர்ந்த மாணவர் ரிஷிகாந்த் (19) அவரது தந்தை ரவிக்குமார் (61) ஆகியோர் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இவர்களின் முன்ஜாமீன் மனுக்கள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் நேற்று விசாரணைக்கு வந்தன. அரசு வக்கீல் ராபின்சன் ஆஜராகி, ‘‘மனுதாரர்கள் விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை. இதனால் கைரேகைகளை பதிவு செய்ய முடியவில்லை’’ என்றார். இதைத்தொடர்ந்து மனுதாரர் தரப்பில் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை நவ. 19க்கு ஒத்திவைத்த நீதிபதி, அதுவரை மனுதாரர்களை கைது செய்ய வேண்டாம் என்ற உத்தரவை நீட்டித்தார்.

Tags : student ,arrest ,Chennai ,probation arrest , Neat choice, impersonation fraud
× RELATED சென்னையில் சோகம்… கெமிக்கல்களை...