×

போலி ஸ்டிக்கர், போலி மதுபாட்டில்கள், போலி ரசீது டாஸ்மாக் விற்பனையில் புரையோடும் ஊழல்: ரெய்டு என்ற பெயரில் கல்லா கட்டும் மாவட்ட அதிகாரிகள்

* சிறப்பு செய்தி

தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனையில் போலி சரக்கு, போலி ஸ்டிக்கர், போலி ரசீது மற்றும் அதிரடி ரெய்டு என்ற பெயரில் மாதந்தோறும் லட்சக்கணக்கில் கல்லா கட்டும் மாவட்ட அதிகாரிகளால் அரசின் கஜானாவிற்கு செல்ல வேண்டிய வருவாயின் ஒரு பகுதி அவர்களின் பாக்கெட்டுகளை நிரப்பி வருவதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் 7 ஆயிரத்து 896 டாஸ்மாக் சில்லரை மது விற்பனை கடைகள் இயங்கி வந்தன. இதில் 2 ஆயிரத்து 698 டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்பட்டதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, 5 ஆயிரத்து 198 டாஸ்மாக் கடைகள் தற்போது இயங்கி வருகின்றன. அதேநேரத்தில், படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கி வந்த டாஸ்மாக் கடைகளின் நேரம் குறைக்கப்பட்டு, மதியம் 12 மணிக்குதான் கடைகள் திறக்கப்படுகிறது. மேலும் டாஸ்மாக் கடைகளின் நேரத்தை 2 மணி நேரம் குறைத்து மதியம் 2 மணிக்கு கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தை மது இல்லாத மாநிலமாக மாற்றுவதற்காகவே டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை மற்றும் கடைகளின் இயக்க நேரத்தை குறைப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்வதாக சொல்லப்படுவது அப்பட்டமான பொய் என்று புகார் எழுந்துள்ளது. மாறாக, டாஸ்மாக் கடைகளின் விற்பனையை உயர்த்த மறைமுக உக்திகள் கையாளப்படுவதாக சமூக ஆர்வலர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதற்கேற்ப டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை மற்றும் நேரம் குறைக்கப்பட்டும் நடப்பாண்டில் டாஸ்மாக் வருமானம் ரூ31 ஆயிரத்து 158 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ4,360 கோடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 2019-20ல் டாஸ்மாக் வருமானம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைக்கு தமிழகத்தின் முக்கிய வருவாய் கொழிக்கும் துறையாகவே டாஸ்மாக் மாறிவிட்டது. அதேபோல், ஊழல் புரையோடும் துறையாகவும் இருப்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் வெளிப்படையாகவே தெரியும். ஆனால், அதுபற்றி சிந்திக்காமல் குடிமகன்கள், நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி ரசீது கொடுக்கிறார்களா,

மதுபாட்டில்கள் மீது அச்சிடப்பட்ட தொகையை மட்டுமே வசூலிக்கிறார்களா என்பதுபற்றி கண்டுகொள்வதில்லை. டாஸ்மாக் கடைகளில் குவார்ட்டர் பாட்டில்களுக்கு ரூ5 கூடுதலாக வசூலிப்பதும், பீர் பாட்டில்களுக்கு ரூ10 கூடுதலாக வசூலிப்பதும் சாதாரணமாகிவிட்டது. ரசீது வழங்குவது தொடர்பாக பலமுறை அறிவிப்புகள் வெளியானபோதும் எந்த டாஸ்மாக் கடையிலும் மதுபாட்டில்களுக்கு ரசீது வழங்கப்படுவதில்லை. கடைசியாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கூட டாஸ்மாக் கடைகளில் ரசீது கட்டாயம் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதுதொடர்பான சுற்றறிக்கையில், ‘விற்பனையாளரின் கையெழுத்துடன் ரசீது வழங்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், குடிமகன்களுக்கு வழங்கியதாக போலியாக ரசீது பதிவு செய்து விற்பனையாளர்கள் சமர்ப்பிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், டாஸ்மாக் ரசீது எப்படி இருக்கும் என்பதை பார்த்ததே கிடையாது என்கின்றனர் குடிமகன்கள். மேலும் டாஸ்மாக் விற்பனையை அரசு ஏற்று நடத்த தொடங்கியதே இதற்கு காரணம் என்றும் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து குடிமகன்கள் கூறுகையில், ‘அரசாங்கம் எப்போது டாஸ்மாக் துறையை கையில் எடுத்ததோ, அப்போதே மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்க தொடங்கிவிட்டனர். அரசாங்கம் செய்யும் தவறு குறித்து அரசாங்கத்திடமே புகார் கொடுப்பதால் என்ன பயன்? எனவே, வேறு வழியின்றி கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் வாங்குகிறோம்’ என்றனர். இதற்கிடையில், ‘ரெய்டு என்ற பெயரில் வரும் அதிகாரிகளுக்கு ரூ5 ஆயிரம் வழங்க வேண்டியுள்ளது. இதுதவிர மாதாந்திர கப்பமும் கட்ட வேண்டும். இதனால், கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்க நிர்ப்பந்திக்கப்படுகிறோம்’ என்று டாஸ்மாக் விற்பனையாளர்கள் புலம்புகின்றனர். டாஸ்மாக் விற்பனையாளர்களின் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் டாஸ்மாக் துறையில் ஸ்வைப்பிங் இயந்திரம், பில்லிங் மிஷின் ஆகியவற்றை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில் அதிகாரிகள் தயக்கம் காட்டுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் போலி மதுபாட்டில்கள் புழக்கம் சமீபத்தில் அதிகரித்து வருவதாக குடிமகன்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மதுபாட்டில்கள் மீது ஒட்டப்படும் கம்பெனி லேபிள்கள், ஹோலோ கிராம் ஸ்டிக்கர்களை அச்சு அசலாக எந்தவித பிழையுமின்றி போலியாக தயாரிக்கும் கும்பல்கள் பிடிபட்ட  சம்பவங்களே இதற்கு சாட்சி. மொத்தத்தில் டாஸ்மாக்கில் புரையோடிப்போன ஊழலையும், குடிமகன்களை பாழாக்கும் மதுப்பழக்கத்தையும் ஒழிப்பது அவ்வளவு எளிதல்ல. ‘மதுப்பழக்கம் நாட்டுக்கும், உயிருக்கும் கேடு’ என்பதை அனைவரும் புரிந்து ெகாள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

மாதம் ரூ5 கோடி மாமூல்
மாதந்தோறும் டாஸ்மாக் கடைகளில் அதிகாரிகள் ரூ5 ஆயிரம் முதல் ரூ10 ஆயிரம் வரை வசூலிக்கிறார்களாம். இதுதவிர பண்டிகை விசேஷ நாட்களில் விற்பனை அதிகமாகும் பட்சத்தில் தனியாக கவனித்துவிட வேண்டுமாம். டாஸ்மாக் மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யும் அதிகாரிகளுக்கு ஒவ்வொரு கடையில் இருந்தும் ரூ5 ஆயிரம் கொடுக்க வேண்டுமாம். இதில் மாதம் 2 முறை கூட பறக்கும் படையினர் ஆய்வு நடத்துகிறார்களாம். இதன் மூலம் ரூ2 கோடி வரை மாமூல் வசூலிக்கப்படுவதாக டாஸ்மாக் சூபர்வைசர்கள் கூறுகின்றனர். மொத்தத்தில் அதிகாரிகளுக்கு மட்டும் டாஸ்மாக் விற்பனையில் மாதம் ரூ5 கோடி மாமூல் கிடைக்கிறது.

அட்டை பெட்டியிலும் ஊழல்
மதுபாட்டில்கள் கொண்டு வரப்படும் காலி அட்டை பெட்டி ரூ3.10க்கும், பீர்பாட்டில்கள் அட்டை பெட்டி ரூ2.50க்கும் விற்க அரசு உத்தரவிட்டது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக அட்டை பெட்டிகளை எடுக்க யாரும் முன்வரவில்லை என்று கூறி அட்டை பெட்டிகள் ரூ1.50 முதல் ரூ2 வரையே விற்பனை செய்யப்படுகிறது. அட்டை பெட்டிகளை அதிக விலைக்கு விற்றுவிட்டு குறைந்த விலைக்கு விற்றதாக கணக்கில் காட்டுவதாக கூறப்படுகிறது.

Tags : breweries ,District ,Raidu ,Fake Brewers , Fake Sticker, Fake Brewers, Fake Receipt, Task Sales, Scam
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...