×

ஆங்கில வழி கல்வி எதிர்ப்புக்கு பதிலடி: உங்கள் பிள்ளைகள் எங்கு படித்தார்கள்?... சந்திரபாபுவிடம் ஜெகன் மோகன் கேள்வி

ஐதராபாத்: ஆந்திராவில் அடுத்த கல்வியாண்டில் இருந்து, 1 முதல் 6ம் வகுப்பு வரை ஆங்கிலம் பயிற்று மொழியாகவும், தெலுங்கு, உருது ஆகியவை கட்டாய பாடமாகவும் கல்வி முறையில் மாற்றம் செய்யப் போவதாக அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சமீபத்தில் அறிவித்தார். அடுத்த 4 ஆண்டுகளில் 10ம் வகுப்பு வரையிலும் ஆங்கில வழிக்கல்வி அமல்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார். இதற்கு முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் நடிகரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கு பதிலடி தரும் வகையில் விஜயவாடாவில் நடந்த தேசிய கல்வி தின விழாவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பேசியதாவது: சந்திரபாபு நாயுடு, உங்கள் மகன் எந்தப் பள்ளியில் படித்தார்? நாளை உங்கள் பேரன் எந்த பயிற்று மொழியில் படிக்கப் போகிறார்? வெங்கையா நாயுடு அவர்களே, உங்கள் மகனும், பேரனும் எந்த பயிற்று மொழி பள்ளியில் படித்தார்கள்? 3 மனைவி, நான்கைந்து பிள்ளைகள் கொண்ட பவன் கல்யாணின் குழந்தைகள் எந்த பள்ளியில் படிக்கிறார்கள்? ஆங்கில வழிக் கல்வியை எதிர்க்கும் இவர்கள், இந்த கேள்விகளுக்கு தங்கள் நெஞ்சில் கை வைத்து பதில் சொல்ல வேண்டும். இன்றைய சவால் நிறைந்த உலகில் போட்டி போட ஆங்கிலம் கட்டாயம். எனவே, நம் குழந்தைகள் ஆங்கில வழியில் படிக்க வேண்டும் என்பதற்காக இத்திட்டத்தை தொடங்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : children ,protest , English Way Education, Chandrababu, Jegan Mohan
× RELATED புது வாழ்விற்கு வழியமைத்ததிரு(புது)நாள்