அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வர வேண்டும்: துணை முதல்வர் ஓபிஎஸ் அழைப்பு

சென்னை: அமெரிக்காவில் வாழும் தமிழர்களுக்கு, அமெரிக்காவில் தொழில் புரிவது எப்படி பயனளிக்கும்  விதத்தில் இருக்கிறதோ, அதே மாதிரி தமிழகத்திலும் தொழில் தொடங்க முன்வர வேண்டும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார். அரசு முறை பயணமாக, அமெரிக்கா சென்றுள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சிகாகோ நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் தமிழகத்தில் புதிய முதலீடுகள் செய்யும் வாய்ப்புகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது: வர்த்தகம், எரிசக்தி, தொழில்நுட்பம், உற்பத்தி மற்றும் பாதுகாப்பில் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் நீண்ட நெடிய பொருளாதார வர்த்தக தொடர்பு இருக்கிறது. அமெரிக்கர்களுக்கும், அமெரிக்க வாழ் இந்தியர்களும்,

இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் புதிய முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்நிகழ்ச்சி மூலம் அழைப்பு விடுக்கிறேன். இந்தியாவில் உள்ள மிகவும் முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்கிறது. இந்திய பொருளாதாரத்தில் இரண்டாவது பெரிய மாநிலம் தமிழ்நாடு என்பது மட்டுமின்றி- முதலீடுகளுக்கு மிகவும் உகந்த மாநிலமாகவும் விளங்குகிறது. இந்தியாவின் ஆட்டோமொபைல் தலைநகரமாக விளங்கும் தமிழ்நாட்டில் ஒரு நிமிடத்திற்கு மூன்று கார்கள், 30 வினாடிக்கு 1 இரு சக்கர வாகனம், 90 வினாடிக்கு 1 டிரக் உற்பத்தி செய்யும் வலுவான, உயர்தர உட்கட்டமைப்பு வசதிகளை கொண்டிருக்கிறது. இந்தியாவின் உள் நாட்டிலே தயாரிக்கப்பட்ட மிக அதிவிரைவு ரயில், சமீபத்தில் சந்திர கிரகத்திற்கு ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை ஏவிய கிரையோஜெனிக் இன்ஜின் உள்பட அனைத்தும் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை.

தொழில் புரிவதற்கு அனைத்து உதவிகளையும் செய்ய எங்கள் மாநிலம் தயாராக இருக்கிறது. ஆகவே, தமிழ்நாட்டின் வளர்ச்சி பாதையில் நீங்கள் அனைவரும் இணைந்து பயணிக்க வேண்டும். அமெரிக்காவில் வாழும் தமிழர்களுக்கு - தாங்கள் பிறந்த தமிழ்நாட்டின் மீது ஒரு தனிப்பாசம் இருக்கும். இந்தியாவில் உள்ள மற்ற மாநிலத்திலிருந்து வந்து இங்கு இருப்பவர்களும், அமெரிக்காவில் தொழில் புரிவது எப்படி பலனளிக்கும் விதத்தில் இருக்கிறதோ அதே மாதிரி தமிழகத்திலும் தொழில் புரிவது பலனளிக்கும் என்பதை உணர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>