×

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினுடன் முத்தரசன், திருமாவளவன் சந்திப்பு

* உள்ளாட்சி தேர்தலை கூட்டணியாக சந்திப்போம் என்று அறிவிப்பு
* பொதுக்குழு தீர்மானத்துக்கும் வாழ்த்து

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை முத்தரசன், திருமாவளவன் ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர். உள்ளாட்சி தேர்தலை கூட்டணியாக சந்திப்போம் என்றும் அவர்கள் கூறினர். உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் நடைபெற வாய்ப்புள்ளது. இதற்கான தேதி இந்த மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுக, அதிமுக தயாராகி வருகிறது. இரண்டு கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை வாங்குவதற்கான தேதியை அறிவித்துள்ளன. உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளும் உள்ளாட்சி தேர்தல் கூட்டணி சம்பந்தமாக ஆலோசனை நடத்தி வருகின்றன. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அண்மையில் சந்தித்து உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் திமுக கூட்டணியில்  இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பொதுச்செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் சென்னை அண்ணா  அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்து பேசினர். அப்போது, உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பேச்சுவார்த்தை  நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடம் வரை  நடந்தது. பின்னர் விசிக தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஒரே தேசம், ஒரே மொழி என்று தற்போதைய மத்திய பாஜ அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இந்த காலகட்டத்தில் மாநில உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட வேண்டும் என்று திமுகவின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இது வரவேற்கத்தக்கது. அதே போல், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்றும் திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை  அதிகரிக்க வேண்டும் என்று எந்த மாநிலத்தில் இருந்தும் குரல் எழும்பவில்லை.  எந்த கட்சியும் இதனை வலியுறுத்தவில்லை. ஆனால், திமுக வலியுறுத்தியுள்ளது.  இது சமூகநீதியை பாதுகாக்க வேண்டும் என்ற திமுகவின் அக்கறையை காட்டுகிறது.  
திமுக தலைமையிலான கூட்டணி  கட்டுக்கோப்புடனும், நல்லிணக்கத்துடனும் உள்ளது. இந்த கூட்டணி வர உள்ள  சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வரை பயணிக்கும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. வர உள்ள உள்ளாட்சி தேர்தலையும்  கூட்டணியாகத்தான் சந்திப்போம். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் மற்றும் துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து பேசினர்.

சந்திப்புக்கு பின்னர் முத்தரசன் அளித்த பேட்டி: திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஆதரித்து வாழ்த்துக்களை மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்தோம். வகுப்புவாத சக்திகள் தலைதூக்கி இருக்கக் கூடிய நேரத்தில், திமுகவின் தீர்மானங்கள் சிறப்பாக அமைந்துள்ளன. மக்களுடைய அடிப்படை பிரச்னைகளை சரி செய்ய, உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும். விருப்ப மனுக்களை அதிமுக பெறுவதாக இருந்தாலும், உள்ளாட்சித் தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். உள்ளாட்சி தேர்தலில் ஒன்றுபட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயல்படுவோம். கோவையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் மீது அதிமுகவின் கொடிக்கம்பம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் அதிமுக இதுபோன்ற செயல்களை கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Mutharasan ,Thirumavalavan ,Chennai Mutharasan ,MK Stalin ,Anna Vidyalaya , Chennai, MK Stalin, Mutharasan, Thirumavalavan, meet
× RELATED இசையில் ஏது சாதிய ஏற்றத்தாழ்வு;...