×

நடைபாதைகளை மீட்டு பராமரிக்க கோரி வழக்கு ஆக்கிரமிப்பு வாகனங்களை அகற்றி அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும்: மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நடைபாதைகளை மீட்டு பராமரிக்க கோரிய வழக்கில், ஆக்கிரமிப்பு வாகனங்களை அப்புறப்படுத்தி, அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த ஆடிட்டர் வந்தனா ஷக்காரியா என்பவர்  தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் 50 கோடி செலவில் நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றை சரியாக பராமரிக்கவில்லை. மாநகராட்சி நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.   நடைபாதைகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாலும், மின்சார பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளதாலும் பாதசாரிகள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.  நடைபாதைகளில் கோயில்கள், ஆலயங்கள், மசூதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்பு வழிபாட்டு தலங்களுக்கு விழா எடுக்கும் போர்வையில் நடைபாதைகளை முற்றிலும் அடைத்து விடுகிறார்கள். வீடு இல்லாத பலர் நடைபாதைகளிலேயே இரவு தூங்குகிறார்கள். அவர்கள் மீது வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்படுகின்றன.

 எனவே, சென்னை மாநகராட்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதைகளை பராமரிக்குமாறும் நடைபாதைகளை ஆக்கிரமித்துள்ள கடைகள், மின்சார பெட்டிகள், நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்துமாறும் மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகராட்சி சார்பில் ஆஜரான வக்கீல், மாற்று இடம் வழங்கும் விவகாரத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் கவுன்சிலர்கள் இல்லாததால் பணியை தொடர முடியவில்லை என்றார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதி தொடர்பான வழக்கில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக பிறப்பித்த உத்தரவில், மாற்று இடம் வழங்கும் குழுவில் கவுன்சிலர் தேவையில்லை என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் கடை நிலை ஊழியர்களே நடைபாதைகளில் கடைகள் அமைத்திருக்கிறார்கள். சென்னை உயர் நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள என்.எஸ்.சி.போஸ் சாலை நடைபாதையில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எனவே,  குறைந்தபட்சம் உயர் நீதிமன்றம் அமைந்துள்ள என்.எஸ்.சி. போஸ் சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்தி நாளை (இன்று) காலை மாநகராட்சியின் 5வது மண்டல செயற்பொறியாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.சென்னை மாநகராட்சியின் கடை நிலை ஊழியர்களே நடைபாதைகளில் கடைகள் அமைத்திருக்கிறார்கள்.


Tags : restoration ,The Corporation , lawsuit, sidewalk, vehicles, filed,Corporation
× RELATED சென்னையில் அடையாறு, கூவம்...