×

போக்குவரத்து தடை செய்து 3 நாட்களாகியும் கிடப்பில் சாலை சீரமைப்பு பணி: நெரிசலில் திணறும் வாகன ஓட்டிகள்

அண்ணாநகர்: கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக சென்று வருகின்றன. இதேபோல், கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு காய்கறிகளை வாங்கி செல்வோரும் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். போக்குவரத்து மிகுந்த இச்சாலை, சமீபத்தில் பெய்த மழையால் குண்டும் குழியுமாக மாறிவிட்டது. இதனால், பேருந்துகளை இயக்க முடியாமல், டிரைவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், காய்கறிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், சாலை பள்ளங்களில் சிக்கி பழுதடைந்து வந்தன. குறிப்பாக, கோயம்பேடு மார்க்கெட் எதிரே, சாலை முற்றிலும் சிதிலடைந்து காணப்படுவதால், அப்பகுதியில் காலை, மாலை நேரங்களில் நெரிசல் அதிகரித்து வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இந்நிலையில், அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க முடிவு செய்தனர்.

இதற்காக, கடந்த 10ம் தேதி மேற்கண்ட பகுதியில் சாலை சீரமைப்பு பணிக்காக, பாதை மூடப்பட்டது. இதனால், வாகனங்கள் எதிர் திசையில் இயக்கப்படுகின்றன. ஆனால், மூன்று நாட்களாகியும் இதுவரை சாலை சீரமைப்பு பணி நடைபெறவில்லை. தற்போது, ஒருவழிப் பாதையில் அரசு விரைவு பேருந்து, வேன்கள், லாரிகள், ஆட்டோ, கார், இருசக்கர வாகனம் ஆகியவைகள் செல்வதால் காலை மற்றும் மாலை வேளையில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. அங்கு, போக்குவரத்தை சீர் செய்ய போக்குவரத்து போலீசார் கூட இல்லாததால், வாகன ஓட்டிகளின் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘‘ஒருவழிப் பாதையில் எல்லா வாகனமும் செல்வதால் காலையில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்பவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். ஒரு வழிப்பாதையை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.



Tags : motorists , Traffic , banned, work,congestion
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...