×

முதல்வரை நெகிழ செய்த கேரள மாற்றுத் திறனாளி: காலை பிடித்து பாராட்டு

திருவனந்தபுரம்: இரண்டு கைகளும் இல்லாத மாற்றுத் திறனாளி வாலிபருடன் செல்பி எடுத்துக் கொண்டும், அவருடைய காலை பிடித்து ‘கை குலுக்கி’யும் கேரள முதல்வர் பினராய் விஜயன் நெகிழ வைத்துள்ளார்.கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பினராய் விஜயன் முதல்வராக இருக்கிறார். இவர் நேற்று தனது பேஸ்புக்கில் அனைவரையும் நெகிழ வைக்கும் புகைப்படத்தையும், பதிவையும் வெளியிட்டுள்ளார். பேஸ்புக்கில் அவர் கூறியிருப்பதாவது: இன்று காலை சட்டப்பேரவையில் உள்ள எனது அலுவலகத்திற்கு வந்தபோது இதயத்தை நெகிழச் செய்யும் சம்பவம் நடந்தது. திருச்சூர் மாவட்டம், பாலக்காட்டை சேர்ந்த பிரணவ் என்ற வாலிபர் என்னை சந்திப்பதற்காக, தனது தந்தை பாலசுப்பிரமணியம், தாய் சொர்ண குமாரியுடன் வந்திருந்தார்.

பிரணவுக்கு 2 கைகளும் இல்லை. தனது கால்களால்தான் எல்லா வேலைகளையும் செய்து வருகிறார். இன்று அவருக்கு பிறந்த நாளாகும். டெலிவிஷன் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதின் மூலம் கிடைத்த பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவதற்காக என்னை சந்திக்க வந்தார்.என்னுடன் நீண்ட நேரத்தை செலவிட்ட பின்னர், செல்பி எடுத்துக் கொண்டு சென்றார். கைகள் இல்லாததால்  அவர் தனது காலால்தான் என்னுடன் செல்பி எடுத்துக் கொண்டார். இதுபோன்ற இளைஞர்கள் பலரது வாழ்க்கையிலும் உந்து சக்தியாக இருக்க வேண்டும். அவர் சிற்றூர் அரசு கல்லூரியில் பி.காம். படித்து முடித்துள்ளார். தற்போது அரசு தேர்வாணைய தேர்வுக்காக தயாராகி வருகிறார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.அதோடு,  கைகள் இல்லாததால் பிரணவின் காலை பிடித்து குலுக்கி பினராய் விஜயன் பாராட்டு தெரிவித்துள்ளார். அந்த புகைப்படத்தையும் அவர் வெளியிட்டு இருக்கிறார்.

Tags : Kerala , Flexible, Kerala, Morning, Appreciation
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...