×

இறப்பிலும் இணை பிரியா தம்பதி: 104 வயது முதியவர் மரணம் அதிர்ச்சியில் மனைவியும் சாவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே 104 வயது முதியவர் மரணமடைந்தார். இந்த அதிர்ச்சியில் இவரது மனைவியும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள குப்பக்குடி கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிவேல். இவருக்கு வயது 104. விவசாயம் பார்த்து வந்தார். இவரது மனைவி பிச்சாயி(100). இவர்களுக்கு 5 மகன்கள், 1 மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. 27 பேரன், கொள்ளுபேரன்கள் உள்ளனர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக வயது முதிர்வின் காரணமாக வெற்றிவேல் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார். அப்போது அருகில் அவரது மனைவி பிச்சாயி இருந்தார். கணவர் இறந்த துக்கம் தாங்காமல் அழுது கொண்டே இருந்தார். சிறிது நேரத்தில் பிச்சாயியும் அங்கேயே மயங்கி விழுந்து இறந்தார். 24 வயதில் வெற்றி வேலுக்கு திருமணம் ஆனது. கிட்டத்தட்ட 80 ஆண்டுகள் கணவன், மனைவி இருவரும் இணை பிரியாமல் வாழ்ந்து வந்தனர். இப்போது இருவரும் ஒன்றாகவே இறந்துள்ளது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அருகருகே வைக்கப்பட்ட 2 பேரின் சடலங்களுக்கும் அப்பகுதி மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். 2 பேரின் சடலங்களுக்கும் ஒரே நேரத்தில் இறுதி சடங்கு செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது.

Tags : widow ,death , Couples
× RELATED மின்சாரம் தாக்கி வாலிபர் பலி