×

பி.எஸ்.என்.எல் விருப்ப ஓய்வு திட்டம் ஊழியர்கள் மத்தியில் அமோக வரவேற்பு: ஒரே வாரத்தில் 70,000 பேர் விண்ணப்பம்

புதுடெல்லி: பி.எஸ்.என்.எல் விருப்ப ஓய்வு திட்டம் ஊழியர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றுள்ளது. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் ஒரே வாரத்தில் 70 ஆயிரம்  பேர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல்- ஐ இணைக்க மத்திய அமைச்சரவை அண்மையில் முடிவு செய்தது. கடந்த 10 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கும் இந்த இரு நிறுவனங்களுக்கும் 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் சுமை உள்ளது. இதையடுத்து இந்த இரு நிறுவனங்களில் பணிபுரியும் 50 வயதை கடந்த ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப்பட்டது. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றும் 1 லட்சத்து 50 ஆயிரம் ஊழியர்களில் 1 லட்சம் பேர் விருப்ப ஓய்வு திட்டத்திற்கு தகுதியானவர்கள். 94 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் விருப்பம் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரே வாரத்தில் 70 ஆயிரம் பேர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

இத்திட்டத்தில் விண்ணப்பிக்க டிசம்பர் 3ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு என மத்திய அரசு சுமார் 69 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது. விரைவில் இரு நிறுவனங்களும் இணைக்கப்பட்டு அதன் சொத்துக்களை விற்பதன் மூலம் 3 ஆண்டுகளில் லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வி.ஆர்.எஸ். திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்களுடன் இதுவரை பணியாற்றிய ஒவ்வொரு ஆண்டுக்கும் 35 நாள் ஊதியமும், பணிக்காலம் இருக்கக்கூடிய ஒவ்வொரு ஆண்டுக்கும் 25 நாள் ஊதியமும் வழங்கப்படும். இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தினால் ஆண்டுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

Tags : BSNL Optional Retirement Program Employee Reception , BSNL, optional retirement plan, welcome, 70,000 people, application
× RELATED அக்பர்பூர் நகரத்தின் பெயர் மாற்றம்..? யோகி ஆதித்யநாத் பேச்சால் சர்ச்சை