×

அரிசிராஜா யானையை பிடிக்க வனத்துறையினர் முயற்சிகளில் பின்னடைவு

கோவை: பொள்ளாச்சி அர்த்தநாரிபாளையத்தில் அரிசிராஜா யானையை பிடிக்க வனத்துறையினர்  முயற்சித்து வருகின்றனர். பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அர்த்தனாரிபாளையம் கிராமத்திற்குள் அடிக்கடி புகுந்து அரிசியை விரும்பி உண்பதால் இந்த யானைக்கு அரிசி ராஜா என்று பெயரிட்டு அழைக்கிறார்கள் அப்பகுதி மக்கள். அங்குள்ள ரேஷன் கடைகள், வீடுகளில் அரிசி மூட்டைகளில் இருந்து அரிசியை உண்பதோடு, விவசாயத் தோட்டங்களிலும் காட்டு யானை நுழைந்து சேதப்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது.

மாகாளி என்ற முதியவர், 6 வயது சிறுமி ரஞ்சனா ஆகியோரை கடந்த மே மாதம் தாக்கிக் கொன்ற இந்த யானை, ராதாகிருஷ்ணன் என்ற விவசாயியை சில தினங்களுக்கு முன் அடித்துக்கொன்றது. இதனால், யானையை பிடிக்க வேண்டும் என்று அர்த்தனாரிப்ப;ளையம் மக்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து யானையை பிடிக்க 70-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் அங்கு முகாமிட்டுள்ளனர். யானையை பிடிக்க மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், ஆனைமலை புலிகள் காப்பக இணை இயக்குனர் மாரிமுத்து, கால்நடை மருத்துவர் சுகுமார் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் முகாமிட்டுள்ளனர். அதனை பிடித்த பின்னர் டாப்சிலிப் வரகழியார் யானைகள் முகாமில் வைத்து வளர்ப்பு யானையாக மாற்றவும் வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

யானையை பிடிக்க கலீம், பாரி என்ற இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. யானைக்கு அரிசி என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் அரிசியை கொட்டி வைத்து அதனை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க வனத்துறையினர், திட்டமிட்டுள்ளனர். ஆனால் 2 கும்கி யானைகள், 100 கிலோ ரேஷன் அரிசி வைத்து அரிசிராஜாவை பிடிக்கும் முயற்சிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.


Tags : Forest Department ,Ariziraja , Forest Department backfires, efforts,e Ariziraja elephant
× RELATED காட்டுத் தீ பரவுவது தடுக்கப்பட்டுள்ளது: வனத்துறை தகவல்