×

அயோத்தி ராமர் கோயில் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அறக்கட்டளை அமைக்கும் பணி தொடங்கியது

லக்னோ: அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ராமர் கோயில் அறக்கட்டளையை அமைக்கும் பணியை மத்திய அரசு தொடங்கி உள்ளது. இதற்காக, சட்ட அமைச்சகம் மற்றும் அட்டர்னி ஜெனரலிடம் அதிகாரிகள் குழு ஆலோசித்து வருகிறது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நில வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை தீர்ப்பளித்தது. அந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம், அயோத்தியில் மசூதி கட்ட சன்னி வக்பு வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலம் வழங்கவும் உத்தரவிட்டது. மேலும், 3 மாதத்திற்குள் ராமர் கோயில் அறக்கட்டளையை அமைக்க வேண்டுமெனவும் மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ராமர் கோயில் அறக்கட்டளைக்கான பணியை மத்திய அரசு தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அறக்கட்டளை தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக ஆய்வு செய்ய அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, அறக்கட்டளையை எவ்வாறு அமைக்க வேண்டும், அது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து சட்ட அமைச்சகம் மற்றும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான அட்டர்னி ஜெனரலிடம் ஆலோசித்து வருகின்றனர்.
மேலும், அடுத்த ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி ராம நவமி அன்று கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படலாம் என அரசு தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. ராமர் பிறந்தநாள், ராம நவமியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் கோயில் கட்டும் பணி நிறைவடையும். 2024ல் கும்பாபிஷேகம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ராமர் கோயிலை கட்டுவதற்கான முதற்கட்ட பணிகளை விஸ்வ இந்து பரிசத்தின் ராமஜென்ம பூமி நிவாஸ் அமைப்பு கடந்த 1989ம் ஆண்டிலிருந்தே மேற்கொண்டு வருகிறது. ராமஜென்ம பூமி திட்டமிட்ட வடிவமைப்பிலேயே கோயில் கட்டப்படும் என கூறப்படுகிறது. இதற்கு 212 கல் தூண்கள் தேவைப்படும். அதில், 106 தூண்கள் ஏற்கனவே தயாரித்து முடிக்கப்பட்டு விட்டது. இதுதவிர கோயில் கட்ட தேவையான 1,80,000 கல் பலகைகள் தயார் நிலையில் உள்ளன.

சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கரை சுற்றி உள்ள 62.23 ஏக்கர் பரப்பளவில் ராமர் கோயில் மிக பிரமாண்டமாக கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதில், 43 ஏக்கர் ராமஜென்மபூமி நிவாசுக்கு சொந்தமானது, மற்ற 20 ஏக்கர் நிலம் வேறு சில இந்து அமைப்புகளுக்கு சொந்தமாக இருந்தது. இவற்றை கையகப்படுத்திய மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம், அவற்றை உரிமையாளர்களிடமே திருப்பி கொடுத்தது. நிலம் கையகப்படுத்தும் போது ராமஜென்ம பூமி நிவாஸ் உள்ளிட்ட அமைப்புகள் அரசிடமிருந்து இழப்பீடு தொகையாக ஒரு பைசா கூட வாங்கவில்லை. எனவே தற்போது இந்த நிலத்தை ராமர் கோயில் கட்டுவதற்கான அவர்கள் மீண்டும் அரசுக்கு தானமாக வழங்குவார்கள் என கூறப்படுகிறது.

இந்த 62.23 ஏக்கர் நிலமும் ராமர் கோயில் கட்டுவதற்காக அமைக்கப்படும் அறக்கட்டளையிடம் வழங்கப்படும். இந்த அறக்கட்டளையானது சோம்நாத் கோயில், அமர்நாத் கோயில் மற்றும் வைஷ்ணவா தேவி கோயில் அறக்கட்டளை போன்று அமைக்கப்பட உள்ளது. கடந்த 1989ம் ஆண்டிலேயே ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு விட்டது. எனவே மீண்டும் தற்போது அடிக்கல் நாட்டும் பணிகள் தொடங்கப்படுமா என்பது உறுதியாகவில்லை.

5 ஏக்கர் நிலம் தேர்வு
ராமர் கோயில் கட்டுவதற்கான நிலத்தை அறக்கட்டளையிடமும், மசூதி கட்ட வக்பு வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலத்தையும் ஒரே நேரத்தில் ஒப்படைக்க உபி அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அயோத்தியில் மசூதி கட்டுவதற்கு ஏற்றதான 5 ஏக்கர் நிலத்தை தற்போது அரசு தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதே சமயம் 5 ஏக்கர் நிலத்தை ஏற்பதா இல்லையா என்பது குறித்து வரும் 26ம் தேதி சன்னி வக்பு வாரியம் முடிவெடுக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Supreme Court ,Ayodhya Rama Temple , Ayodhya Rama Temple Case, Supreme Court, Trust
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...