×

ஹாங்காங் போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு

ஹாங்காங்:  ஹாங்காங்கில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஹாங்காங்கில் குற்றவழக்குகளில் சிக்கும் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்துவதற்கு வகை செய்யும் சட்டமசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் வெடித்தது. இந்த மசோதாவை அரசு திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. எனினும் ஜனநாயக உரிமைக் கோரி கடந்த 24 வாரங்களாக அங்கு தொடர்ந்து போராட்டம் நடந்து வருகின்றது. சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் ஒருவர் போலீஸ் துப்பாக்கி சூட்டில் பலியானார். இந்த சம்பவத்தை அடுத்து அங்கு போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

சாய் வான் ஹோ மாவட்டத்தில் நேற்று போராட்டக்காரர்கள்,  மீது போலீஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டதில் குண்டு பாய்ந்த ஒருவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். தொடர்ந்து மேலும் இரண்டு முறை போலீஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டதில் மற்றொரு நபர் காயமடைந்தார்.  இதனைத் தொடர்ந்து இருவரையும் போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்துவது பேஸ்புக்கில் நேரலையாக ஒளிப்பரப்பானது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு போராட்டம் மேலும் வலுவடைந்துள்ளது. பொது வேலைநிறுத்தத்துக்கு போராட்டக்காரர்கள் அழைப்பு விடுத்தனர்.

உயிரோடு தீ வைப்பு
ஹாங்காங்கில் போராட்டத்தின்போது இளைஞரை உயிரோடு தீ வைத்து எரிக்கும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மா ஆன் ஷான் மாவட்டத்தில் போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட 3 வீடியோக்கள் சமூக வலைதளம் மற்றும் செய்தி சேனல்களில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பச்சை நிற சட்டை அணிந்த நபர் மக்களுடன் வாதாடிக் கொண்டிருக்கிறார். அப்போது முகமூடியோடு கருப்பு நிற உடை அணிந்துள்ள ஒருவர் அந்த நபர் மீது ஏதோ திரவத்தை ஊற்றி தீ வைக்கிறார். பற்றி எரியும் தீயில் இருந்து தப்பிக்க, தான் அணிந்திருக்கும் சட்டையை அந்த நபர் கழற்ற முயற்சிக்கிறார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அவர் பிரின்ஸ் வேல்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.   இதுகுறித்து போலீசார் கூறுகையில், “ வீடியோ காட்சியின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை நடத்தப்படும்” என்றார்.

Tags : protest ,Hong Kong ,police firing , Hong Kong protests, cops, shootings
× RELATED 26ம் தேதி ஒன்றிய அரசை கண்டித்து கடலில்...