×

புள்ளீங்கோ ஸ்டைல் வேணாங்கோ ஸ்டூடண்ஸுக்கு முடியை பாத்து வெட்டுங்க..: சலூன் சலூனாக போய் நோட்டீஸ் கொடுக்கும் ஆசிரியர்கள்

தென்காசி: பள்ளி மாணவர்களின் ஹேர் ஸ்டலை பார்த்து பெற்றோர்கள் மட்டும் அல்ல ஆசிரியர்களும் மிரண்டு போயுள்ளனர்.  வடகொரியாவில் ஆண்களும், பெண்களும் இந்த மாதிரி தான் முடிவெட்டிக் கொள்ள வேண்டும் என்று கூறி 28 விதமான முடியலங்காரங்களை நிர்ணயித்துள்ளார்கள். மீறினால் தண்டனை. ஆனால் இந்தியாவில் கட்டுப்பாடே இல்லை. பின்னுகிறார்கள். குறிப்பாக பள்ளி மாணவர்களின் ஸ்டைல் தாறுமாறாக இருக்கிறது. தமிழகத்தில் இன்னும் ஒருபடி மேல். சிலிர்த்துக்கொண்டு நிற்கும் ஸ்டைல், பட்டை பட்டையாக கோடு போட்ட ஸ்டைல், ஸ்பைக், எழுத்தையே தலையில் வடிக்கும் ஸ்டைல் என ரகவாரியாக முடியலங்காரம் செய்துகொள்கின்றனர். நகர்ப்பகுதி மாணவர்களிடம் மட்டுமே காணப்பட்ட இந்த ‘சிகை நாகரீகம்’ இப்போது கிராமப்புற மாணவர்களிடமும் தொற்றிக்கொண்டுள்ளது. ஆசிரியர்கள் இதைக் கண்டு திகைத்துப்போயுள்ளனர். முன்பெல்லாம் ஒட்ட வெட்டப்படும் போலீஸ் கட்டிங்தான் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டது. இப்போதும் பல பள்ளிகள் முடி சீரமைப்பில் கண்டிப்போடுதான் உள்ளனர். ஆனால் மாணவர்கள்தான் கேட்பதாக இல்லை.

 இதற்காக நெல்லை மேலகரம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் புது முடிவு எடுத்துள்ளனர். இங்கு பயிலும் மாணவர்கள் பாக்ஸ் கட்டிங், ஒன்சைடு கோடு போடுதல், வீ கட்டிங், ஸ்பைக், பாக்ஸ் கட்டிங், கிராஸ் கோடு, சினிமா பிரபலங்கள் போல கட்டிங் என புதிதுபுதிதாக கட்டிங் செய்து கொண்டு விதவிதமான தோற்றங்களில் முடியை வெட்டிக் கொண்டு வகுப்பறைக்கு வந்துள்ளனர். ‘சாதா கட்டிங் பண்ணுங்கடா’ என ஆசிரியர்கள் கெஞ்சி கேட்டும் யாரும் கேட்பதாக இல்லை. ஒரு மாணவரை பார்த்து இன்னொரு மாணவர் என எல்லோரும் சிகையலங்காரத்தில் கவனம் செலுத்தி படிப்பில் கோட்டை விட்டனர்.  நிலைமை மோசமாவதற்குள் இதை தடுக்க வேண்டும் என நினைத்த மேலகரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சீனிவாசன், அந்த பகுதியில் உள்ள சிகை அலங்கார நிபுணர்களுக்கு வேண்டுகோள் விண்ணப்பம் என்ற பெயரில் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், மாணவர்களுக்கு ஒழுக்கத்தை மேம்படுத்துவது ஆசிரியர்களை மட்டும் சார்ந்த விஷயம் அல்ல, இதில் நம் சமூகத்திற்கும் தொடர்பு உள்ளது. அதில் சிகை அலங்கார நிபுணர்களாகிய நீங்கள் முக்கிய பங்கு வைக்கிறீர்கள். உங்களின் செயல்பாடு மாணவர்களின் அகத்தையும், புறத்தையும் அழகுறச் செய்கிறது.

உங்களுக்கு என் ஆசிரியர் சமூகத்தின் சார்பில் வாழ்த்துக்கள். அத்துடன் ஒரு சிறு கோரிக்கை. பள்ளி மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்றார் போல் விதவிதமாக முடிவெட்டுவதை தவிர்த்து பள்ளி சூழலுக்கு ஏற்றாற்போல அவர்களுக்கு சிகை அலங்காரம் செய்து கொடுக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இது மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்த உதவும். வாருங்கள் ஒன்று பட்டு ஒற்றுமையோடு புதிய தேசத்தை உருவாக்குவோம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை ஆசிரியர்களும் இப்போது சலூன் சலூனாக போய் வழங்கி வருகின்றனர்.


Tags : Venango ,Pointyngo Style Venango Teachers Go To The Salon Salon , Pointyngo Style , Teachers ,saloon salon ..
× RELATED மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள்...