×

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் காற்றுமாசு உண்மைதான் யாருக்கும் சுவாசகோளாறு இல்லை: அமைச்சர் உதயகுமார் தகவல்

சென்னை: தலைநகர் டெல்லியை தொடர்ந்து சென்னையிலும் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்துள்ளது. அதன்படி கடந்த 7 நாட்களாக காற்று மாசு சென்னையில் அதிகரித்து காணப்பட்டதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  மூச்சு திணறலால் கடும் அவதிப்பட்டு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இந்த நிலையில் காற்றின் மாசு குறித்து சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது.இந்த கூட்டத்தில் வருவாய் துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், மாசு கட்டுப்பாட்டு செயலாளர் சேகர், மாசு கட்டுப்பாட்டு வாரிய கூடுதல் தலைமை பொறியாளர் செல்வம், சுகாதாரத்துறை  இயக்குனர் குழந்தை சாமி, ஐஐடி பேராசிரியர் சிவநாகேந்திரன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் 8 இடங்களில் காற்று மாசை அளவை கணக்கிடும் நிலையங்கள் உள்ளது. இதில் 2 இடங்களில் காசு மாற்று அதிகளவில் இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் சாலை பணிகள், கட்டிடப்பணிகள் நடைபெறும் இடங்களில் தண்ணீர்  தெளித்து தூசிகளின் அளவை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னையில் ஏற்பட்டுள்ள காற்று மாசுக்கு, கடல் காற்று எதிர்பார்த்த அளவுக்கு நிலப்பரப்பு பகுதியில் வீசாததே முக்கிய காரணமாகும். கடந்த வாரம் பனி மூட்டம் அதிகளவில் இருந்தது. மேக கூட்டங்கள் கீழே இறங்கி வந்துள்ளதும், புல்புல்  புயல் காரணமும் காற்று மாசு அதிகரிக்க காரணமாகும். சென்னையில் ஏற்பட்டுள்ள காற்று மாசு குறித்து ஆய்வு செய்ய சென்னை ஐஐடி பேராசிரியர்கள், மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க  உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் நாட்களில் கடல் காற்று நிலப்பரப்பு பகுதியில் வீசும்போது காற்று மாசு சரியாகும். ஆனாலும், டெல்லி போன்று நமக்கு பெரிய ஆபத்து இல்லை. பொது சுகாதார துறையின் மூலம் அனைத்து  மருத்துவமனைகளிலும் சுவாசம் தொடர்பான பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை காற்று மாசு காரணமாக சுவாசு கோளாறு ஏற்பட்டதாக யாரும் சிகிச்சை பெறவில்லை. காற்று மாசை தடுக்க  தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.



Tags : Nobody ,Minister Udayakumar ,suburbs ,Chennai , Chennai ,suburbs, problems, Minister Udayakumar
× RELATED பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும்...