சேஷன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

புதுடெல்லி: முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் மறைவுக்கு தலைவர்கள் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளனர்.முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் தனது பணி ஓய்வுக்கு பின்னர், சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வசித்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளாக உடல் நலமற்ற நிலையில் இருந்த அவர் நேற்று முன்தினம் இரவு  காலமானார். அவருக்கு வயது 86.கடந்த 1990 முதல் 1996 வரையிலான தனது பணி காலத்தின்போது, நாடு முழுவதும் தேர்தல் நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் நடத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு  சீர்திருத்தங்களை இவர் அறிமுகப்படுத்தினார். 1995ம் ஆண்டு பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியான இவருக்கு 1996ல் ரமோன் மகசேசே விருது வழங்கப்பட்டது. பாதுகாப்புத் துறை செயலர், அமைச்சரவை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளையும்  அவர் வகித்துள்ளார். இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.ராகுல் காந்தி: ராகுல் காந்தி தனது டிவிட்டர் பதிவில், `இன்று போல் அல்லாமல், பாகுபாடற்றவராக, மதிப்பளிக்க கூடியவராக, தைரியமானவராக, நீதி, நேர்மைக்கு அஞ்சுபவராக இருந்த அப்போதைய தேர்தல் ஆணையர்களில் டி.என்.சேஷனும்  ஒருவர். அவரது மறைவுக்கு அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்’’ என கூறியுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி: முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையரும், ஓய்வு பெற்ற மூத்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரியுமான டி.என்.சேஷன் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த  வேதனை அடைந்தேன். இவர் தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றிய காலகட்டத்தில், தேர்தல் நடைமுறைகளில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டுவந்தவர் என்ற பெருமைக்குரியவர். சேஷனை இழந்து வாடும் அவருடைய  குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.திமுக தலைவர் ஸ்டாலின்: இந்திய தேர்தல் ஆணையம் டி.என்.சேஷன், தலைமை தேர்தல் ஆணையராக இருந்தபோது, முழுமையாக தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பாக கம்பீரமாகத் திகழ்ந்தது. சுதந்திரமான, நேர்மையான தேர்தலை  நடத்தி, ஜனநாயகத்தின் உறுதிமிக்க பாதுகாவலனாக சேஷன் திகழ்ந்தார். அவர் காட்டிய, ‘நேர்மையான தன்னாட்சிப் பாதை’ என்றைக்கும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் நிலைத்த, நீடித்த பாதையாக அமைவது, அவருக்கு இந்த  நாடு செலுத்தும் மரியாதை, உண்மையான அஞ்சலியாகும். கேரள முதல்வர் பினராய் விஜயன், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல்  தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>