×

ஐகோர்ட் கிளையில் முகிலன் பரபரப்பு அபிடவிட் தாக்கல் ரயிலில் இருந்து காரில் கடத்தி இருட்டறையில் அடைத்து வைத்து மயக்க ஊசி போட்டனர்

* குடும்பத்தை இழக்க நேரிடும் என எச்சரித்து கடுமையாக தாக்கினர்

மதுரை: ரயிலில் இருந்து காரில் கடத்தி, இருட்டு அறையில் மயக்க ஊசி போட்டு அடைத்து வைத்ததாக ஐகோர்ட்டில் முகிலன் அபிடவிட் தாக்கல் செய்துள்ளார். ஈரோடு மாவட்டம், சென்னிமலையைச் சேர்ந்தவர் முகிலன் (எ) சண்முகம் (53). சமூகப்போராளியான இவர், இயற்கை வள பாதுகாப்பு, ஜல்லிக்கட்டு போராட்டம் உள்ளிட்ட பல சமூக பிரச்னைகளில் தீவிரமாக செயல்பட்டார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சென்னையில் கடந்த பிப். 15ல் பேட்டியளித்த அவர், அதன் பின்னர் மாயமானார். இதுதொடர்பான ஆட்கொணர்வு வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், முகிலன் மாயமான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியது. இந்நிலையில், போராட்டத்தில் பங்கேற்ற ஒரு பெண்ணை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக, குளித்தலை அனைத்து மகளிர் போலீசில் முகிலன் மீது புகார் அளிக்கப்பட்டது. பின்னர் இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதனிடையே, கடந்த ஜூலை 6ம் தேதி திருப்பதி ரயில் நிலையத்தில் முகிலனை, சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். தற்போது அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் அவர் மனு செய்திருந்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதி, மாயமான காலக்கட்டத்தில் எங்கிருந்தார் என்பது தொடர்பாக முகிலன் தரப்பில் அபிடவிட் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. புகார் அளித்த பெண் தரப்பில், முகிலனுக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது முகிலன் தரப்பில் தாக்கல் செய்த அபிடவிட்டில் கூறியிருப்பதாவது: கரூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் எனது வாக்குமூலத்தை பதிவு செய்ய வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஸ்ெடர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு குறித்த 6 நிமிட வீடியோ ஆவணம் எனக்கு கிடைத்தது. இதை கடந்த பிப். 15ல் சென்னையில் வெளியிட்டேன். இதுபோன்ற பல சம்பவங்களில் நான் முக்கிய சாட்சியமாக உள்ளேன்.  அன்றைய தினம் சென்னை, மடிப்பாக்கத்தில் இரவு உணவை முடித்து, மதுரைக்குச் செல்வதற்காக எழும்பூர் ரயில் நிலையம் வந்தேன். முன்பதிவில்லாத பெட்டியில் பயணித்தேன். செங்கல்பட்டு வரை முகநூல் பயன்படுத்தினேன். பிறகு தூங்கி விட்டேன். விழித்துப் பார்த்தபோது என் கண்கள் கட்டப்பட்டிருந்தன. காரில் செல்வதும், என்னுடன் இருவர் இருந்ததையும் உணர்ந்தேன். ‘யார் நீங்கள்? என்னை எங்கு கொண்டு செல்கிறீர்கள்’ என கேட்டேன். அதற்கு அவர்கள், என்னை தாக்கினர். தொடர்ந்து தாக்கியதால் அமைதியானேன். அவர்கள் பேசிக்கொண்ட மொழியை என்னால் உணர முடியவில்லை. ஒருவர் மட்டும் அரைகுறையாக தமிழில் பேசினார். அந்த கார் நீண்ட தூரம் போய்க் கொண்டே இருந்தது. பிறகு கண்களை கட்டியபடி, ஏதோ ஒரு வீட்டின் முதல் தளத்தில் இருட்டு அறையில் என்னை அடைத்து வைத்தனர். கார் சத்தத்தை தவிர வேறு எதுவும் எனக்கு கேட்கவில்லை. மறுநாள் ஒருவர் என் கண்ணிலிருந்து துணியை அகற்றினார்.

அந்த நபர் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான எனது நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டால் எது வேண்டுமானாலும் தருவதாக கூறினார். ஆனால், நான் ஒத்துக் கொள்ளவில்லை. ‘உன் குடும்பத்தை இழக்க வேண்டி வரும்’ என எச்சரித்தார். இருவேளை உணவு மட்டுமே தந்தனர். ஒருமுறை தப்பிக்க முயன்றேன். என்னை பிடித்து தாக்கினர்.  இதனால் கண் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. வலுக்கட்டாயமாக ஊசி போட்டு மயக்க நிலையில் வைத்திருந்தனர். இதிலிருந்து 15 நாட்கள் கழித்து அவர்களது செல்போன் மூலம் ஒரு செய்தியை காட்டினர். அதில், என் மனைவியும், மகனும் டூவீலரில் சென்றபோது லாரி மோதி பலியானதாக செய்தி இருந்தது. இதைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். ஆனால், எனக்கு தொடர்ந்து ஊசி ேபாட்டு சுயநினைவின்றி மயக்க நிலையிலேயே வைத்திருந்தனர். இப்படியே சில மாதங்கள் போனது.

அரைமயக்கத்தில் ஒரு லாரியில் ஏற்றி சென்று, ஏதோ கிராமத்தில் மரத்தடியில் இறக்கிவிட்டு சென்றனர். என் நிலையைப் பார்த்த நாடோடிகள் மருந்து கொடுத்து உதவினர். இந்த பாதிப்பில் இருந்து மீள 2 மாதங்கள் ஆனது. அப்போது தான் நான் ஜார்கண்ட் மாநிலத்தில் இருப்பது எனக்கு தெரிந்தது. இதன்பிறகு பல ஊர்களில் இருந்து ரயில் வழியாக திருப்பதி வந்து சேர்ந்தேன். அப்போது ரயில் முன் அமர்ந்து கோஷமிட்டேன். ஆந்திர போலீசார் என்னை பிடித்து தமிழக சிபிசிஐடியிடம் ஒப்படைத்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. அப்போது அரசுத் தரப்பில், தலைமை குற்றவியல் வக்கீல் ஆஜராக வேண்டியிருப்பதால் அவகாசம் வேண்டும் என கோரப்பட்டது. இதையடுத்து மனு மீதான விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : Abidavid ,Mukhilan ,Icort Branch ,branch ,HighCourt , Mukhilan frightened, abidavit filing train , HighCourt branch
× RELATED உபரி ஆசிரியர் கலந்தாய்வுக்கு...