×

4 நாட்கள் நடந்த அதிரடி சோதனையில் போலி கணக்கு காட்டி ஜேப்பியார் கல்வி குழுமம் 350 கோடி வரி ஏய்ப்பு

* 5 கோடி பணம்,3 கோடி மதிப்பிலான தங்கம், வைரம் பறிமுதல்

சென்னை: போலி கணக்கு காட்டி ஜேப்பியார் கல்வி குழுமம் ரூ.350 கோடி வரி ஏய்ப்பு செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், கணக்கில் வராத ரூ.5 கோடி பணம், ரூ.3 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் தீவிர ஆதரவாளரான ஜே.பங்குராஜ் (எ) ஜேப்பியார் கடந்த 1988ம் ஆண்டு கல்வி அறக்கட்டளை தொடங்கினார். தொடங்கிய சில ஆண்டுகளிலேயே அடுத்தடுத்து சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி, சத்யாபாமா மருத்துவ கல்லூரி, ஜேப்பியார் மாமல்லன் பொறியியல் கல்லூரி மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, புனிதமேரி மேலாண்மை கல்வி நிறுவனம், பனிமலர் பொறியியல் கல்லூரி, பனிமலர் பாலிடெக்னிக் கல்லூரி, செவிலியர் கல்லூரி, பள்ளிகள் என 15 கல்வி நிறுவனங்கள் தொடங்கினார். இதுதவிர, மீன்பிடி துறைமுகம், சிமென்ட் தொழிற்சாலை, பால், மினரல் வாட்டர், இரும்பு தயாரிப்பு தொழிற்சாலை என பல நிறுவனங்கள் தொடங்கினார். இந்த கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் இரண்டு விதமாக கணக்கு பராமரித்து பல கோடி ரூபாய் மத்திய அரசுக்கு வரிஏய்ப்பு செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதபோல், தொழில் நிறுவனங்களிலும் போலி கணக்குகள் மூலம் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது.

அதைதொடர்ந்து கடந்த 7ம் தேதி ஜேப்பியார் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான சூளைமேடு, செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர், பூந்தமல்லி மற்றும் மீன்பிடி துறைமுகம், சிமென்ட் தொழிற்சாலை, இரும்பு தொழிற்சாலை என ஜேப்பியாரின் மகள்கள் மற்றும் மருமகன்கள் வீடு மற்றும் அலுவலகங்கள் என 33 இடங்களில் 133 வருமான வரித்துறை அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து அதிரடி சோதனை நடத்தினர். 33 இடங்களிலும் 4 நாட்கள் நடந்து வந்த சோதனை ேநற்று முன்தினம் முடிந்தது. இந்த அதிரடி சோதனையில் ஜேப்பியார் கல்வி குழுமம் மற்றும் தொழில் நிறுவனங்களில் கணக்கில் வராத ரூ.5 கோடி பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது. இரண்டு மகள்கள் வீடுகளில் எந்த வித ஆவணங்களும் இன்றி வைத்திருந்த ரூ.3 கோடி மதிப்புள்ள தங்கம், வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மீன்பிடி துறைமுகத்தில் நடந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத பல கோடி மதிப்புள்ள ரசீது பறிமுதல் செய்யப்பட்டது. ஜேப்பியார் கல்வி குழுமம் மற்றும் தொழில் நிறுவனங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் செய்தனர். அப்போது, போலி கணக்கு மூலம் ரூ.350 கோடி  வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், சோதனையில் கிடைத்த ஆவணங்களின்படி ஜேப்பியார் மகள்கள் மற்றும் மருமகன்கள், கல்வி மற்றும் தொழில் நிறுவன நிர்வாகிகள் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு ஜேப்பியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ரூ.8 கோடி பணம் மற்றும் பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags : tax evasion ,JPEAR Education Group , JPEAR Education Group , alleged tax evasion
× RELATED பலகோடி ரூபாய் வரிஏய்ப்பு செய்ததாக...