×

திருவள்ளுவர் மண்ணில் பணி செய்வது பெருமை : சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதி பேச்சு

சென்னை : திருவள்ளுவர், ராமானுஜம் பிறந்த கலாச்சார மண்ணில்பணி செய்வதில் பெருமை கொள்வதாக புதிதாக பதவியேற்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி கூறினார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த வி.கே.தஹில்ரமானி, மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். இதனைதொடர்ந்து, அவர் பணியிட மாற்றத்தை திரும்ப பரிந்துரை செய்யும்படி கேட்டுக்கொண்டார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், தன் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதியாக,
பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமரேஷ்வர் பிரதாப் சாஹி என்ற ஏ.பி.சாஹியை நியமித்து கடந்த அக்டோபர் 30ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து புதிய தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பதவி ஏற்பு விழா சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவன், தர்பார் மண்டபத்தில் நேற்று காலை 9.30 மணியளவில் நடந்தது. புதிய தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

பதவி ஏற்பு நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் தனபால், அமைச்சர்கள், சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி, ஆர்.சுப்பையா, எம்.சத்யநாராயணன், என்.கிருபாகரன் உள்ளிட்ட அனைத்து நீதிபதிகளும் கலந்து கொண்டனர். மேலும், தலைமை செயலாளர் சண்முகம், டி.ஜி.பி. திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய தலைமை நீதிபதிக்கு வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், தலைமை நீதிபதியை வரவேற்று, அவரது சிறப்புகள் குறித்து பேசினார். மேலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், சென்னை உயர் நீதிமன்ற வக்கீல்கள் சங்கத்தின் துணை தலைவர் ஆர்.சுதா, மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், பெண் வக்கீல்கள் சங்கத் தலைவர் லூயிசால் ரமேஷ், லா அசோசியேஷன் தலைவர் செங்குட்டுவன் ஆகியோர் பேசினர்.

இதற்கு நன்றி தெரிவித்து தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பேசுகையில், ‘‘தமிழகம் கலாச்சாரம் ரீதியாக மேன்மை அடைந்த மாநிலமாகும். தெய்வப்புலவர் திருவள்ளுவர், முடிவில்லா கணிதத்தை தந்த ராமானுஜம் உள்ளிட்ட அறிஞர்கள் பிறந்த கலாச்சார பெருமை வாய்ந்த மண்ணில் தலைமை நீதிபதியாக பணியாற்றுவதில் பெருமை கொள்கிறேன். நாட்டின் வளர்ச்சிக்கு, நீதிபதிகள், வக்கீல்களின் பங்கு இன்றியமையாதது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த உயர் நீதிமன்றத்தில் நான் மேற்கொள்ள இருக்கும் பணிக்கு அனைத்து தரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன்’’ என்றார். தொடர்ந்து, ஏ.பி.சாஹி முதல் அமர்வில் வழக்குகளை விசாரிக்க தொடங்கினார். அப்போது, வழக்கறிஞர் சூரியபிரகாசம் ஆஜராகி, சென்னையில் காற்று மாசு குறித்து முறையீடு செய்தார். அதனை கேட்ட நீதிபதி, எனக்கு பாட்னாவில் இருக்கும்போதே இந்த பிரச்னையின் தீவிரம் தெரியும். எனவே உரிய ஆய்வு மேற்கொண்டு அடுத்த வாரம் மனு தாக்கல் செய்யுங்கள் என்று அறிவுறித்தினார்.


Tags : Tiruvalluvar , Proud to work , Tiruvalluvar soil, New Chief Justice of India
× RELATED ஒரத்தூர் சாம்பான் கோயில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி