×

ஜோலார்பேட்டையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக குறுகிய இடத்தில் இயங்கிவரும் வட்டார வேளாண்மை அலுவலகம்: புதிய கட்டிடம் அமைக்க கோரிக்கை

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் 38 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சியில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் கோடியூரில் வட்டார வேளாண்மை துறை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகம் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக குறுகிய இடவசதியால் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. குறுகிய கட்டிடத்திலேயே வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலகம் சிறிய அறைகளாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அலுவலகத்தில் போதுமான இடவசதி இல்லாததால் அலுவலக ஆவணங்கள் பாதுகாப்பான முறையில் வைக்க முடியாமல் அதிகாரிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதனால் பொதுமக்களும் விவசாய அமைப்புகளும் போதுமான இடவசதியுடன் புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புதிய கட்டிடம் அமைப்பதற்கு ரூ.1.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் அரசு இடம் கிடைக்காததால் ஒதுக்கப்பட்ட நிதி நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வட்டார வேளாண்மை துறை அலுவலகத்தின் முன் பகுதியில் சீலிங் சிமென்ட் பூச்சுகள் உடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.

இடையம்பட்டி பகுதியில் இயங்கி வந்த ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகம் தற்போது புதிய அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே இந்த இடத்தில் வட்டார வேளாண்மை துறை அலுவலகத்தை மாற்றலாம் என பொதுமக்கள் கருதுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய அலுவலகம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதுவரை தற்காலிகமாக பழைய நகராட்சி அலுவலகத்தில் இந்த வேளாண்மைத் துறை அலுவலகத்தை செயல்படுத்தவேண்டும் என விவசாய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Regional Agriculture Office ,Jolarpettai ,Regional Agriculture Office: New Building for Request , Jolarpet, 10 year, short space, regional agriculture, office, new building, demand
× RELATED தி.மலை மக்களவை தொகுதிக்குட்பட்ட...